இறுதி அஞ்சலி செலுத்தும் ஆடு!.
மனிதனை மனிதனே மதிக்காமல் போட்டி, பொறாமை குணத்தோடு இருக்கும் இந்த நவீன காலத்தில், ஆடு ஒன்று சாதி, மதம் வேறுபாடின்றி துக்க வீடுகளுக்கு சென்று அஞ்சலி செலுத்தி வருகிறது. அதோடு நில்லாமல், இறந்தவரின் உடலை அடக்கம் செய்யும்வரை அந்த வாயில்லா ஜீவன் சுடுகாட்டிலேயே நின்று, காரியம் முடிந்தபிறகு கிராம மக்களோடு திரும்பி வருகிறது. இந்த சம்பவம் இந்தியாவில் மைசூரு தாலுகா பெலவாடி கிராமத்தில் நடந்துள்ளது.
இறுதி அஞ்சலி செலுத்தும் ஆடு மைசூரு தாலுகா பெலவாடி கிராமத்தை சேர்ந்தவர் புட்டராமா. விவசாயியான இவர் தனது வீட்டின் அருகே ஆட்டுப்பட்டி அமைத்து ஏராளமான ஆடுகளை வளர்த்து வருகிறார். அதில் ஒரு ஆட்டுக்கு மட்டும் விசேஷ குணம் உள்ளது. அதாவது, பெலவாடி கிராமத்தில் யார் இறந்தாலும், அதனை அறிந்து கொள்ளும் இந்த வாயில்லா ஜீவன், முதல் ஆளாக அங்கு ஆஜராகி விடுகிறது.
அங்கு செல்லும் இந்த ஆடு, தனது சைகைகள் மூலம் இறந்தவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்துகிறது. பின்னர் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டு சுடுகாடு செல்கிறது. அங்கு இறந்தவரின் உடலுக்கு காரியம் முடியும் வரை, அந்த ஆடு சுடுகாட்டிலேயே சுற்றி வருகிறது. மேலும் இறந்தவரின் உடலை அடக்கம் செய்யும்போது, தனது காலால் மண்ணை வாரி போட்டு அஞ்சலி செலுத்துகிறது. பின்னர் கிராம மக்களோடு, சேர்ந்து வீட்டுக்கு திரும்பி வருகிறது. இதுவரை இந்த வாயில்லா ஜீவன் பெலவாடி கிராமத்தில் 500–க்கும் மேற்பட்டோரின் இறுதி சடங்கில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தி உள்ளது. செல்லப்பிள்ளையாக... ஆட்டின் இந்த செயல் அந்த பகுதி மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.



