ரஷியாவில் ராணுவ வீரர்கள் குடியிருப்பு இடிந்து விழுந்து 23 பேர் உயிரிழப்பு
ரஷியாவில் ராணுவ வீரர்கள் குடியிருப்பு இடிந்து விழுந்து 23 பேர் உயிரிழந்தனர் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சைபீரியாவில் 4 மாடிகளை கொண்ட ராணுவ வீரர்கள் குடியிருப்பு இடிந்து விழுந்தது என்று ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 42 ரஷிய ராணுவ வீரர்கள் ஓய்வில் இருந்தபோது இச்சம்பவம் நடைபெற்று உள்ளது. கட்டிட இடிபாடுகளை நீக்கியபோது, அங்கிருந்து சுமார் 23 வீரர்கள் சடலமாக மீட்கப்பட்டனர். மற்றவர்கள் உயிருடன் மீட்கப்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. காயம் அடைந்தவர்கள் விமானம் மூலம் ரஷியாவின் தலைநகர் மாஸ்கோவிற்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். ஒம்ஸ்க் பகுதியில் நடைபெற்ற இந்த விபத்து தொடர்பாக ரஷியா அதிபர் விளாடிமீர் புதினிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
விபத்து நடைபெற்ற பகுதியானது மாஸ்கோவில் இருந்து கிழக்கு பதியில் சுமார் 2,200 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. கட்டிடம் இடிந்து விழுந்த பகுதியில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. மாஸ்கோவில் இருந்து மோப்ப நாய்கள் மற்றும் மீட்பு பணிக்கு தேவையான உபகரணங்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. ராணுவ வீரர்களும் மீட்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். கட்டிடம் விழுந்தது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. விசாரணை தொடங்கி நடைபெற்று வருகிறது, இதற்கிடையே அலட்சியம் காரணமாக விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
லைப் நியூஸ் இணையதளத்தில் வெளியிட்டு உள்ள செய்தியில், உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் சுமார் 18 முதல் 24 வயதுகளை கொண்டவர்கள் என்று தெரிவிக்கப்பட்டு உல்ளது. உயிரிழந்தவர்களின் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு சென்று உள்ளனர்.



