Breaking News

இந்திய பெண்கள் ஏமாற்றம்!

நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய பெண்கள் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் மீண்டும் தோல்வி அடைந்தது. இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. முதலிரண்டு போட்டியில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றன. மூன்றாவது போட்டி பெங்களூருவில் நேற்று நடந்தது. ‘டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் மிதாலி ராஜ், ‘பேட்டிங்’ தேர்வு செய்தார். 
வேதா அரைசதம்:
இந்திய அணிக்கு மந்தனா (8), காமினி (4) மோசமான துவக்கம் தந்தனர். கேப்டன் மிதாலி ராஜ் (30) ஆறுதல் தந்தார். ஹர்மன்பிரீத் கவுர் (11), தீப்தி சர்மா (22) பெரிய அளவில் சோபிக்கவில்லை. பொறுப்பாக ஆடிய வேதா (61) அரைசதம் கடந்தார். இந்திய அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 182 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து சார்பில் சோபி டேவின் 3 விக்கெட் வீழ்த்தினார். சுலப இலக்கை விரட்டிய நியூசிலாந்து அணிக்கு கேப்டன் பேட்ஸ், பிரிஸ்ட் சூப்பர் துவக்கம் தந்தனர். இந்திய பந்துவீச்சை எளிதாக சமாளித்த இவர்கள் இருவரும் அரைசதம் கடந்தனர். முதல் விக்கெட்டுக்கு 125 ரன்கள் சேர்த்த போது பேட்ஸ் (59) அவுட்டானார். மறுமுனையில் அசத்திய பிரிஸ்ட் (64) நம்பிக்கை தந்தார். கிரீன் (14), சோபி டேவின் (17) நிலைக்கவில்லை. நியூசிலாந்து அணி 45.4 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 186 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 1–2 என பின்தங்கி உள்ளது. தவிர, வரும் 2017 உலக கோப்பை தொடரில் நேரடியாக பங்கேற்கும் வாய்ப்பை இந்திய அணி கிட்டத்தட்ட இழந்தது.