நைஜரில் மழை, வெள்ளத்தினால் 20 ஆயிரம் மக்கள் பாதிப்பு-4 பேர் பலி
நைஜர் நாட்டில் பெய்து வரும் மழை மற்றும் வெள்ளத்தினால் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 4 பேர் உயிரிழந்திருப்பதாகவும் ஐ.நா. தெரிவித்துள்ளது. கடந்த மாத இறுதியில் இருந்து தொடர்ந்து மழை பெய்து வருவதால் மத்திய மற்றும் தெற்கு நைஜர் பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. நைஜர் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் ஆற்று முகத்துவார பகுதிகளில் வசிக்கும் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறும்படி ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆப்பிரிக்காவின் மூன்றாவது மிகப்பெரிய நதியான நைஜர் நதியில் வெள்ளம் அபாய அளவான 530 செ.மீட்டரையும் தாண்டி 580 செ.மீ. அளவுக்கு பாய்ந்து செல்வதாக நைஜர் வடிநில ஆணையம் தெரிவித்துள்ளது. மழை வெள்ளத்தினால் 2170 வீடுகள் அழிந்துவிட்டன. 545 ஹெக்டேர் விவசாய நிலங்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. தாழ்வான பகுதிகளில் வசித்த 2100 பேர் வெளியேற்றப்பட்டு பள்ளிகள் மற்றும் அவர்களின் உறவினர்களின் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று மனித நேய விவகாரங்களுக்கான ஐ.நா. ஒருங்கிணைப்பு அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது.



