Breaking News

11 வயது வேலைக்கார சிறுமியை அடித்துத் துன்புறுத்திய வங்கதேச வீரர் கிரிக்கெட் ஆட தடை

வங்கதேச கிரிக்கெட் வீரர் ஷஹாதத் ஹுசேனும், அவரது மனைவியும் 11 வயது வேலைக்கார சிறுமியை அடித்துத் துன்புறுத்தியதாகவும், அந்தச் சிறுமிக்கு ஷஹாதத் பாலியல் கொடுமைகளைச் செய்ததாகவும் சர்ச்சை எழுந்துள்ளதைத் தொடர்ந்து ஷஹாதத்தை கிரிக்கெட் ஆடுவதிலிருந்து சஸ்பெண்ட் செய்துள்ளது வங்கதேச கிரிக்கெட் வாரியம். தற்போது ஷஹாதத் தலைமறைவாகி விட்டார். அவரைப் போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். அந்த சிறுமி தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து வங்கதேச கிரிக்கெட் வாரிய செய்தித் தொடர்பாளர் ஜலால் யூனிஸ் கூறுகையில், எங்களது இமேஜை கெடுக்கும் வகையில் ஷஹாதத் நடந்து கொண்டுள்ளார். எனவே அவரை தற்காலிகமாக அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளில் கலந்து கொள்வதற்கும் தடை விதித்துள்ளோம். போலீஸ் விசாரணை முடியும் வரை தடை நீடிக்கும். போலீஸார் அவர் நிரபராதி என்று அறிவித்தால் மட்டுமே இனி அவரால் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க முடியும் என்றார். இந்தத் தடை காரணமாக இந்த வார பிற்பகுதியில் தொடங்கும் வங்கதேச லீக் போட்டியில் அவரால் கலந்து கொள்ள முடியாது. ஏற்கனவே இவர் காயம் காரணமாக இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்காவுடனான தொடர்களில் பங்கேற்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 38 டெஸ்ட், 51 ஒரு நாள் போட்டிகளில் ஷஹாதத் ஆடியுள்ளார். இவர் வேகப் பந்து வீச்சாளர் ஆவார். இவரது மனைவி பெயர் நிரிட்டோ ஷஹாதத். இவரும் தலைமறைவாக உள்ளார். செப்டம்பர் 6ம் தேதி டாக்காவில் உள்ள ஷஹாதத்தின் வீட்டுக்கு அருகே இரவில் காயத்துடன் வேலைக்கார சிறுமி அழுத நிலையி்ல சாலையோரமாக இருந்ததைப் பார்த்த சிலர் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். போலீஸார் வந்து சிறுமியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அந்த சம்பவத்திற்குப் பிறகு இரவோடு இரவாக ஷஹாதத்தும், அவரது மனைவியும் தலைமறைவாகி விட்டனர். அவர்களைப் பிடிக்க அவர்களது கிராமத்து வீடு, நண்பர்கள், உறவினர்கள் வீடுகளிலும் போலீஸார் சோதனை நடத்தினர். ஆனால் இருவரும் சிக்கவில்லை. அந்த சிறுமியை கணவரும், மனைவியுமாக சேர்ந்து கடுமையாக அடித்துள்ளதாக போலீஸார் கூறியுள்ளனர். சிறுமிக்கு கிரிக்கெட் வீரர் பாலியல் ரீதியான சித்திரவதைகளையும் செய்ததாகவும் கூறப்படுகிறது. சிறுமியின் உடல் முழுவதும் காயம் உள்ளதாகவும், தினசரி அவரை இருவரும் அடித்து வந்துள்ளதாகவும் போலீஸார் கூறுகிறார்கள்.