என் தங்கையின் கணவர் ரொம்பவும் நல்லவர் - காஜல் அகர்வால்
தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகையாக இருக்கும் காஜல் அகர்வால் மனம் திறந்து பேசினார். நான் இப்போது தமிழ் படங்களில் தான் அதிகமாக நடிக்கிறேன். தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறேன். எனது எடை 3 கிலோ குறைந்து இருக்கிறது. இதற்காக உணவு கட்டுப்பாடு எதையும் கடைபிடிக்க வில்லை. நான் விஷாலுடன் நடித்த ‘பாயும் புலி’ படம் தெலுங்கில் மொழி மாற்றம் செய்து வெளியிடப்படுகிறது. விஷால் நல்ல மனிதர். மனிதாபிமானம் மிகுந்தவர். நான் மிகவும் சுதந்திரமாக இருக்கிறேன். கல்லூரியில் படித்தபோதும் அப்பா எனக்கு கட்டுப்பாடு விதிக்கவில்லை. பூக்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். பூவை பறித்து தலையில் சூடுவதைவிட அது செடியில் இருப்பது தான் எனக்கு அழகாக தெரியும். நான் திரை உலகத்துக்கு வந்து 9 ஆண்டுகள் ஆகிறது. தொடர்ந்து கதாநாயகியாக நடித்து வருகிறேன். வருடங்கள் ஓடினாலும், முன்பு எப்படி இருந்தேனோ, இப்போதும் அப்படியே இருக்கிறேன். தமிழ் படங்களில் எனக்கு அதிக வாய்ப்பு வருகிறது. படத்தில் கதாநாயகர்களுடன் காதல் செய்வதாக நடிக்கிறேன். ஆனால் இதுவரை யாரையும் காதலிக்க வில்லை. ஆனால் நிறைய நண்பர்கள் கிடைத்து இருக்கிறார்கள். என் தங்கை நிஷா காதலித்து திருமணம் செய்து இருக்கிறார். அவரது காதலர் நல்லவரா என்பதை நன்றாக அறிந்த பிறகு தான் அவர்களுக்கு திருமணம் நடத்தி வைத்தேன். என் தங்கை கணவர் மிகவும் நல்லவர். தங்கைக்கு திருமணம் நடந்தால் அக்காவுக்கு திருமணம் நடக்க வேண்டும் என்பது பழைய காலம் அப்போது அப்படி எந்த நிபந்தனையும் இல்லை. நான் நடிப்பதுடன் எனது தந்தையின் நிறுவனத்தையும் கவனித்து வருகிறேன். நேரம் வரும்போது எனது திருமணம் நடைபெறும். அது பெற்றோர்கள் ஏற்பாடு செய்யும் திருமணமா? காதல் திருமணமா? என்பது அப்போது தெரியும்.



