Breaking News

மனுவின் தலைப்பைத் திருத்துவதற்கு கோட்டாவுக்கு உயர்நீதிமன்றம் நேற்று அனுமதி.

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டபய ராஜபக்ஷ, நிதிக்குற்ற விசாரணைப்பிரிவினால் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்படும் அபாயம் தொடர்பான தனது மனுவின் தலைப்பைத் திருத்துவதற்கு உயர்நீதிமன்றம் நேற்று செவ்வாய்க்கிழமை (06) அனுமதியளித்துள்ளது.

பிரதம நீதியசர் கே.ஸ்ரீபவன், நீதியரசர்களான பிரியந்த ஜயரத்ன, உபாலி அபேரத்ன ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் இந்த விடயத்தை அடுத்தவருடம் ஜனவரி 28ஆம் திகதி எடுப்பதாக அறிவித்துள்ளது. பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டபய ராஜபக்ஷ, நிதிக் குற்ற விசாரணைப் பிரிவுக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை (கடந்த மே மாதம் 11ஆம் திகதி) தாக்கல் செய்திருந்தார்.

நிதி குற்ற விசாரணைப் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டமையை சவாலுக்கு உட்படுத்தியே அவர், மனுவை தாக்கல் செய்துள்ளார். தன்னை கைது செய்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக அவர் தெரிவித்திருந்தார். சட்டத்தரணி சனத் விஜேவர்தன் ஊடாக பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவில் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சரவை, பொலிஸ் மா அதிபர், நிதி மோசடி விசாரணை பிரிவின் பணிப்பாளர் உள்ளிட்ட 44 பேர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர். பிரதமரினால்  கடந்த  பெப்ரவரி மாதம் 13ஆம் திகதி வெளியிடப்பட்ட 1901/20 வர்த்தமானி மற்றும் அதன் ஊடாக உருவாக்கப்பட்ட நிதி மோசடி விசாரணை பிரிவு ஆகியவற்றை வலிதற்றதாக்குமாறே அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது. இந்நிலையில், கோட்டா தாக்கல் செய்த மனுவின் தலைப்பைத் திருத்துவதற்கே உயர்நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.