மூவின மக்களினதும் ஒற்றுமைக்காக பாடுபட்ட மாமனிதரே சோபித தேரர் காத்தான்குடி ஐ.தே.க மத்திய குழு உறுப்பினர் ஏ.எல்.எம்.றபீக் அனுதாபம்.
சோபித தேரர் அவர்கள் மூவின மக்களினதும் ஒற்றுமைக்காக பாடுபட்ட மாமனிதர் என காத்தான்குடி ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் ஏ.எல்.எம்.றபீக் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
மதுலுவாவே சோபித தேரர் அவர்களின் மறைவு குறித்து அவர் வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அந்த அனுதாபச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களின் ஒற்றுமைக்காகப் பாடுபட்ட மாமனிதராகவும் ஒரு நம்பிக்கை நட்சத்திரமாகவும் வாழ்ந்தவர் மதுலுவாவே சோபித தேரர் அவர்கள். சிங்கள மக்களினது உணர்வுகளைப் புரிந்து கொண்ட அதேவேளை தமிழ்பேசும் மக்களின் எதிர்பார்ப்புகளையும் அபிலாஷைகளையும் புரிந்து கொண்டு இந்த நாட்டின் நல்லிணக்கத்திற்கும் சமூக நல்லுறவுக்கும் தன்னை அர்ப்பணித்து செயற்பட்டார்.
தான் நேசித்த நாட்டில் எப்போதும் ஒரு நல்லாட்சியே நிலவ வேண்டுமென உளப்பூர்வமாக விரும்பிய மதுலுவாவே சோபித தேரர் அவர்கள், தனது வாழ்வின் இறுதிப் பகுதி வரை அதற்காக உரத்துக் குரல் கொடுத்திருந்தார். மிக நெருக்கடியான கால கட்டங்களில் கூட தனது நெஞ்சுரமிக்க செயற்பாடுகள் காரணமாக மூவின மக்களினதும் அபிமானத்தைப் பெற்ற ஒரு சமயத் தலைவராக விளங்கினார்.
அன்னாரின் மறைவு இந்த நாட்டை நேசிக்கின்ற அனைத்து மக்களுக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். மதுலுவாவே சோபித தேரர் அவர்கள் விட்டுச் சென்ற பணியினை தொடர்வதே நாம் அவருக்குச் செய்யும் மகத்தான நன்றிக் கடனாகும். எனவும் ஏ.எல்.எம்.றபீக் தனது அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
(எம்.ஐ.அப்துல் நஸார்)
(எம்.ஐ.அப்துல் நஸார்)



