2 கோடிக்கும் அதிகமான வெளிநாட்டு நாணயங்களுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் 50 வயதான பெண் கைது.
வெளிநாட்டு நாணயங்களை கடத்த முற்பட்ட பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார். சுமார் 2 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய பெருந்தொகையான வெளிநாட்டு நாணயங்களுடன் இன்று (21) அதிகாலை 12.45 அளவில் இந்த பெண் கைது செய்யப்பட்டதாக சுங்க ஊடகப் பேச்சாளர் லெஸ்லி காமினி குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாட்டு நாணயங்களை ஹொங்கொங் நோக்கி கடத்திச்செல்ல முற்பட், கடுவெல பகுதியைச் சேர்ந்த 50 வயதான பெண் ஒருவரே சுங்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த பெண்ணின் பயணப் பொதியினுள் 35,700 ஸ்ரேலிங் பவுண்ஸ், 44,170 அமெரிக்க டொலர்கள், தலா ஒரு இலட்சம் நோர்வே மற்றும் டென்மார்க் நாணயங்கள், 30,100 யூரோக்கள் ஆகிய நாணயங்களுடன், சுவிஸ் பிரேங்க், சவூதி அரேபியா, கனடா மற்றும் கொரியா நாடுகளின் நாணயங்களும் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக சுங்க ஊடகப் பேச்சாளர் கூறினார்.
கைப்பற்றப்பட்ட வெளிநாட்டு நாணயங்களின் இலங்கைப் பெறுமதி 2 கோடியே 82 இலட்சத்து 57 ஆயிரத்து 645 ரூபாவென மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. சந்தேகநபரான பெண்ணிடம் சுங்கப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



