Breaking News

பாகிஸ்தானில் பல்கலைக்கழகத்திற்கு துப்பாக்கி எடுத்து செல்ல அனுமதி

பாகிஸ்தானில் வட மேற்கில் உள்ள கைபர் பக்துன் கவா மாகாணத்தில் பெஷாவர் அருகே சரஸ்தாவில் பச்சாகான் பல்கலைக்கழகத்தில் கடந்த ஜனவரி மாதம் 20–ந்தேதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 20 பேர் பலியாகினர்.

அதை தொடர்ந்து தலிபான் தீவிரவாதிகள் விடுத்த மிரட்டலை தொடர்ந்து அங்கு பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் காலவரையின்றி மூடப்பட்டன.

இந்த நிலையில் பச்சாகான் பல்கலைக்கழகம் நேற்று மீண்டும் திறக்கப்பட்டது. அங்கு புதிய கண்காணிப்பு காமிராக்கள், பொருத்தப்பட்டுள்ளன. பாதுகாப்பு பணியில் ஆயுதம் தாங்கிய கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பல்கலைக்கழக வளாகத்தின் சுற்றுச்சுவரின் உயரம் உயர்த்தப்பட்டுள்ளது.

பச்சாகான் பல்கலைக்கழகத்தில் சமீபத்தில் நடந்த தாக்குதலில் வேதியியல் துறை பேராசிரியர் கொல்லப்பட்டார். எனவே ஆசிரியர்கள் பாதுகாப்புக்கு அங்கு அவர்கள் லைசென்சு பெற்றுள்ள துப்பாக்கிகள் எடுத்துவர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. துப்பாக்கியை அவர்கள் தங்களுடனேயே வைத்து கொள்ளலாம். ஆனால் வகுப்பறைகளில் அவற்றை வெளியே எடுக்க கூடாது என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் மாணவர்கள் வகுப்பறைக்கு துப்பாக்கி எடுத்த வர அனுமதி இல்லை. கொண்டு வரும் துப்பாக்கியை வாசலில் பாதுகாப்பு அதிகாரியிடம் ஒப்படைத்து விட்டு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.