89 காட்சிகளை நீக்கிய தணிக்கைக் குழு
இயக்குநர் அபிஷேக் சவுபே இயக்கத்தில் இந்தி நடிகர் ஷாகித் கபூர் கதாநாயகனாக நடிக்கும் படம் ‘உத்தா பஞ்சாப்’. போதைப்பொருட்கள் பற்றிய விழிப்புணர்வை கருப்பொருளாக கொண்ட இந்த படத்தை தயாரிப்பாளர் அனுராக் காஷ்யப் உள்ளிட்டோர் தயாரிக்கின்றனர். இந்த படம் வருகிற 17–ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.
இதையொட்டி, ‘உத்தா பஞ்சாப்’ படத்தை தணிக்கை செய்த தணிக்கைக் குழு, அதில் சில காட்சிகள் ஆட்சேபணைக்கு உரியதாக இருப்பதாக கூறி நீக்கியது. ஆட்சேபணை இருப்பதாக கூறி 89 காட்சிகளை நீக்க வேண்டும் என்று தணிக்கை குழுகூறியதாக தெரிகிறது.
இதனால், வேதனை அடைந்த 43 வயது தயாரிப்பாளர் அனுராக் காஷ்யப், ‘‘திரைப்படத்தின் ஒவ்வொரு காட்சியையும் நீக்குவது, துண்டு, துண்டாக வெட்டி கொலை செய்வதற்கு சமம்’’ என்று டுவிட்டரில் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
இந்த நிலையில் பட தணிக்கைக் குழுவின் அறிக்கை நகலை வழங்குமாறு பட தயாரிப்பாளர்கள் மும்பை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.