ஒலிம்பிக்கில் 23 தங்கம், 3 வெள்ளி, 2 வெண்கல பதக்கத்துடன் அமெரிக்காவின் பெல்ப்ஸ் விடைபெற்றார்
ஒலிம்பிக் போட்டிகளில் அதிக தங்கப் பதக்கங்களை வென்ற நீச்சல் வீரர் என்ற பெருமையை பெற்ற அமெரிக்க நீச்சல் வீரர் மைக்கேல் பெல்ப்ஸ், ரியோ ஒலிம்பிக்கில் 4x100 மீட்டர் மெட்லி நீச்சல் போட்டியில் வென்ற 23-வது தங்கப் பதக்கத்துடன் ஒலிம்பிக் போட்டிகளுக்கு விடை கொடுத்தார்.
அமெரிக்காவை சேர்ந்த நீச்சல் வீரரான மைக்கேல் பெல்ப்ஸ்(31) 2000-ம் ஆண்டில் தொடங்கி, தனது 15-வது வயதில் இருந்தே ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று வந்துள்ளார். 2004-ம் ஆண்டு நடைபெற்ற ஏதென்ஸ் ஒலிம்பிக் போட்டியில் தனது முதல் தங்கப் பதக்கத்தை பதிவு செய்த இவர், ரியோ டி ஜெனீரோ நகரில் நடைபெற்றுவரும் ஒலிம்பிக் போட்டியில் மட்டும் 5 தங்கப் பதக்கம் மற்றும் ஒரு வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார்.
நீச்சல் வீரராக உலகில் அதிக பதக்கங்களை வென்றவர் என்ற வரலாற்று பெருமையுடன் ரியோ ஒலிம்பிக்கில் 4x100 மீட்டர் மெட்லி நீச்சல் போட்டியில் கடைசியாக வென்ற 23-வது தங்கப் பதக்கத்துடன் ஒலிம்பிக் போட்டிகளுக்கு மைக்கேல் பெல்ப்ஸ் இன்று விடை கொடுத்துள்ளார்.
தனது ஓய்வு அறிவிப்பை முன்னரே வெளியிட்டிருந்த பெல்ப்ஸ், ‘இன்னும் நான்கு ஆண்டுகள்வரை காத்திருந்து மற்றொரு ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளும் எண்ணம் இல்லை. இதில் நான் உறுதியாக இருக்கிறேன். நீச்சல் போட்டி குறித்து எனது மனதில் என்னென்ன வைத்திருந்தேனோ அனைத்தையும் செய்து விட்டேன். இந்த சாதனையுடன் விடைபெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது’’ என்றார்.
போதிய அளவு சாதனை படைத்துவிட்டதால் ஒலிம்பிக் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். தனக்கு புதியதாக பிறந்துள்ள மகன் பூமர் மற்றும் மனைவியுடன் நேரத்தை செலவிடப்போவதாகவும் இவர் தெரிவித்துள்ளார்.
ஒலிம்பிக் போட்டிகளில் மட்டும் 23 தங்கம், 3 வெள்ளி, 2 வெண்கலம் என மொத்தம் 28 பதக்கங்களை தனது தாய்நாட்டுக்கு பெற்றுத்தந்து, அமெரிக்காவின் தங்க மகன் என்ற பட்டத்துடன் நீச்சலில் 39 உலக சாதனைகளையும் மைக்கேல் பெல்ப்ஸ் படைத்துள்ளார், என்பது குறிப்பிடத்தக்கது.



