Breaking News

உண்மையில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டோர் கூறுவது குறைபாடுகள் அல்ல ?!

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சேவைத் தரம் குறைந்து செல்வதாக கூறி நேற்று 18 வியாழக்கிழமை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு முன்பாக இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டம் தொடர்பில் பணிப்பாளரிடம் வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் வைத்தியசாலையில் அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் ......
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை முன்பாக மூன்று நபர்கள் ஒரு கவனயீர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதோடு அவர்கள் 13 அம்சங்கள் அடங்கிய மஹஜரை இங்குள்ள குறைபாடுகள் என்று சொல்லி தனக்கு வழங்கி இருந்தனர்.

அத்தோடு உண்மையிலே இந்த 13 அம்சங்களும் தற்போது வைத்தியசாலையிலுள்ள அம்சங்களாகவும் அரசாங்கத்தினால் நடைமுறைபடுத்துகின்ற அம்சங்களாகவே இருக்கின்றது.

உதாரணத்திற்கு இருதய சத்திர சிகிச்சை பிரிவு தேவை என்றார்கள் ஆனால் அது கட்டுவதற்கான சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு அடிக்கல் நடும் நிகழ்வும் இடம்பெறவுள்ளது.

அதே போன்று ஏனைய சில வைத்திய பிரிவுகள் தொடர்பில் கேட்டனர்; அவை அனைத்தும் வைத்தியசாலையில் தற்போது இருப்பதோடு அவை அனைத்தும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

இதுவரையில் வைத்தியசாலை அத்தியட்சகரிடமோ அல்லது ஏனையோரிடமோ எதுவும் கேட்காமல் தன்னிச்சையாக இங்கு குறைபாடுகள் உள்ளதாக கூறுகின்றார்களே தவிர உண்மையிலே இவர்கள் கூறுகின்றது குறைபாடுகள் அல்ல சுகாதார அமைச்சினால் எங்களுடைய வைத்தியசாலைக்கு சகல வசதிகளும் செய்யப்படுகின்றது.

அத்தோடு வைத்தியசாலையின் ஆளணி,விஷேட வைத்திய நிபுணர்களின் எண்ணிக்கை, புதிதாக கட்டிடங்கள்,மின்சார வசதி,தொலைபேசி வசதி ,கிளினிக்குகளின் எண்ணிக்கை போன்ற வசதிகளும் ஏனைய வசதிகளும் கூட்டப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.

இறுதியில் கருத்து தெரிவித்த பணிப்பாளர் தங்களுக்கு புதிதாக கட்டிடங்களை கட்டி இன்னும் இந்த வைத்திய சேவைகளை சிறப்பாக வழங்குவதற்கு கால அவகாசம் தேவை எனவும் அதை சுகாதார அமைச்சோடு தொடர்பு கொண்டு செய்து கொண்டிருக்கின்றோம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

(பழுலுல்லாஹ் பர்ஹான்)