Breaking News

மீள்குடியேற்ற அமைச்சின் நிதி உதவியின் கீழ் மீளக்குடியேற்றப்பட்டவர்களுக்கான வீடுகள் கையளிப்பு-படங்கள்.

கடந்த கால யுத்த வன்செயல்கள் காரணமாக இடம்பெயர்ந்து மீளக்குடியேற்றப்பட்டவர்களுக்காக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு,மீள்குடியேற்றம்,இந்து சமய அலுவல்கள் அமைச்சினால் 8 இலட்சம் ரூபாய் பெறுமதியான 1035 வீடுகள் மட்டக்களப்பு மாவட்டத்தின் 13 பிரதேச செலாளர் பிரிவுகளின் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.

இதற்கமைவாக மீள்குடியேற்ற அமைச்சின் நிதி உதவியின் கீழ் மட்டக்களப்பு -வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற 45 வீடுகளில் முதற்கட்டமாக கட்டி முடிக்கப்பட்ட 3 மூன்று வீடுகளை கையளிக்கும் நிகழ்வு 26 நேற்று ஞாயிற்றுக்கிழமை வவுணதீவு பிரதேசத்தில் இடம்பெற்றது.

இதன் போது முதற்கட்டமாக கட்டி முடிக்கப்பட்ட 3 மூன்று வீடுகள் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத் தலைவரும் ,புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வினால் நாடா வெட்டி உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

இங்கு வீட்டு உரிமையாளர்களுக்கு வீட்டு உரிமைக்கான சான்றிதழும் வழங்கி வைக்கப்பட்டது.

வவுணதீவு பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர் தலைமையில் இடம்பெற்ற மேற்படி வீடுகளை கையளிக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத் தலைவரும் ,புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் கலந்து கொண்டதோடு கௌரவ அதிதிகளாக  சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம், இந்து மத அலுவல்கள் அமைச்சின் செயலாளர் டப்ளியு.எம்.பி.சி.விக்கிரமசிங்க, புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சின் செயலாளர் திருமதி சாந்தி நாவுக்கரசன், புனர்வாழ்வு அதிகார சபையின் தலைவர் என்.பத்மநாதன் உட்பட புனர்வாழ்வு அதிகார சபையின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர். 

(பழுலுல்லாஹ் பர்ஹான்)