Breaking News

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நடவடிக்கை!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா பண்டாரநாயக்க மற்றும் மஹிந்த ராஜபக்ச ஆகியோரின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளுக்கான உயிர் அச்சுறுத்தல் குறித்து பாதுகாப்பு தரப்பினர் அவதானத்துடன் செயற்பட்டு வருகின்றனர். ஜனாதிபதி மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளில் தமிழீழ விடுதலைப் புலிகளினால் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் கூடுதல் உயிர் அச்சுறுத்தல் யாருக்கு காணப்படுகின்றது என்பது குறித்து தனித்தனியாக ஆராயப்படவில்லை. முன்னாள் ஜனாதிபதிகளுக்கான பாதுகாப்பு கூட்டப்படுவதும் குறைக்கப்படுவதும் அப்போதைய பாதுகாப்பு நிலைமைகளின் அடிப்படையிலாகும். இது தொடர்பில் பாதுகாப்பு மதிப்பீட்டு அறிக்கைகள் பெற்றுக்கொள்ளப்படும். அதன் அடிப்படையிலேயே பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகின்றது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க ஓய்வு பெற்றுக் கொள்ளும் போது 138 பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்ட போதிலும், தற்போது அந்த எண்ணிக்கை 66 ஆக குறைக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பதவியிலிருந்து ஓய்வு பெற்றுக்கொண்ட போது வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை 102 எனவும் தற்போது அந்த எண்ணிக்கை 105 ஆக உயர்த்தப்பட்டுள்ளது எனவும் ஜோன் அமரதுங்க நேற்று நாடாளுமன்றில் குறிப்பிட்டுள்ளார். திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுசந்த புஞ்சி நிலமே எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.