Breaking News

நூதனசாலையிலுள்ள சிலைகள் அகற்றப்படும் - முன்னாள் நகர முதல்வர் அஸ்பர்.

நமது நிருபர்
கொழும்பு ஜம்இய்யதுல் உலமா மார்க்கத் தீர்ப்பு வழங்கும் பட்சத்தில் காத்தான்குடியில் அமைக்கப்பட்டுள்ள பூர்வீக நூதனசாலையிலுள்ள சிலைகள் அகற்றப்படும் என காத்தான்குடி நகர சபையின் முன்னாள் முதல்வர் எஸ்.எச்.எம்.அஸ்பர் தெரிவித்தார்.

காத்தன்குடி கயா பேக்ஹவுஸில் நேற்று மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இக் கருத்தை வெளியிட்டார். தொடர்ந்து அவர் கருத்துத் தெரிவிக்கையில் சிலைகள் பற்றி எவரும் பேசாத காலப் பகுதியில் அவற்றை காட்சிப்படுத்துவது தொடர்பில் கொழும்பிலுள்ள ஜம்இய்யதுல் உலமாவிடம் மார்க்கத் தீர்ப்பு வழங்குமாறு கோரி நானே முதலில் கடிதம் எழுதினேன். எனினும் நான் இந்தியா செல்ல தயாராகிக் கொண்டிருந்த வேளையிலேயே    நுதனசாலையினைப் பார்வையிட வேண்டுமென அவர்களால் கோரிக்கை விடுக்கப்பட்டது எனக் குறிப்பிட்டார். 

இப்போதென்றாலும் சரி முன்னாள் அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அவர்களுடன் இணைந்து பூர்வீக நூதனசாலையினைப் பார்வையிட்டு கொழும்பு ஜம்இய்யதுல் உலமா மார்க்கத் தீர்ப்பு வழங்கும் பட்சத்தில் அங்குள்ள சிலைகளை அகற்றுவதற்கோ அல்லது நூதனசாலையினை மூடிவிடுவதற்கோ அல்லது அதனை உடைத்து விடுவதற்கோ தயாராக இருக்கிறோம் என சுட்டிக் காட்டினார். 
காத்தான்குடியில் அமைக்கப்பட்டிருப்பது இஸ்லாமிய நூதனசாலையல்ல, அது முஸ்லிம்களில் பூர்வீகத்தை விளக்கும் பூர்வீக நூதனசாலையாகும். எனவும் அவர் தெரிவித்தார். 

இதனிடையே, காத்தான்குடியில் அமைக்கப்பட்டுள்ள பூர்வீக நூதனசாலை தற்போது அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதால் அது அரசாங்க சொத்தாகும். இந்த நிலையில் உடைப்பதற்கோ அல்லது சிலைகளை அகற்றுவதற்கோ  உங்களால் எப்படி முடியும் என நாம் வினவினோம். அதற்கு பதிலளித்த முன்னாள் நகர முதல்வர் பூர்வீக நூதனசாலை கையளிப்பு என்பது பூரணமாக முற்றுப்பெறவில்லை அதனால் எம்மிடமும் சில அதிகாரங்கள் உள்ளன. எமக்கிருக்கும் அதிகாரத்தைகொண்டு எம்மால் அதனை நிறைவேற்ற முடியும் என அவர் தெரிவித்தார்.