Breaking News

பாராட்டு மழையில் பயஸ்

பாராட்டு மழையில் பயஸ் 

லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் இந்தியாவின் லியாண்டர் பயஸ், சானியா மிர்சா, சுமித் நாகல் கோப்பை வென்று அசத்தினர். இவர்களுக்கு பிரதமர் மோடி, ‘ஜாம்பவான்’ சச்சின் உள்ளிட்ட பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
கடந்த 1990களுக்குப் பின் இந்தியாவின் லியாண்டர் பயஸ், மகேஷ் பூபதி சர்வதேச டென்னிஸ் அரங்கில் சாதிக்கத் துவங்கினர். அடுத்து வந்த சானியா மிர்சா, ரோகன் போபண்ணா அதை அப்படியே தொடர்ந்தனர். 
சர்வதேச டென்னிஸ் அரங்கில் தொடர்ந்து அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இவர்களால், கிரிக்கெட் மட்டும் தான் பிரபலம் என்றிருந்த இந்தியாவில் டென்னிசிலும் சாதிக்கும் நட்சத்திரங்கள் உள்ளனர் என நிரூபணம் ஆனது.
மூன்று கோப்பை:
சமீபத்தில் முடிந்த விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் இந்தியாவுக்கு மறக்க முடியாத வகையில் அமைந்து விட்டது.
முதலில், பெண்கள் இரட்டையரில் இந்தியாவின் சானியா மிர்சா, சுவிட்சர்லாந்தின் மார்டினா ஹிங்கிசுடன் இணைந்து பட்டம் வென்று சாதனை படைத்தார்.
அடுத்து, கலப்பு இரட்டையரில் இந்தியாவின் லியாண்டர் பயஸ், சுவிட்சர்லாந்தின் ஹிங்கிசுடன் இணைந்து கோப்பையை கைப்பற்றினார். இது இவரது 16 வது கிராண்ட்ஸ்லாம் பட்டமாக அமைந்தது.
பின் ஆண்கள் ஜூனியர் இரட்டையர் பிரிவில் 17 வயது இந்திய வீரர் சுமித் நாகல் சாம்பியன் பட்டம் வென்றார். ஆண்கள் இரட்டையரில் போபண்ணா ஜோடி அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியது.
இனி மாறுமா:
ஒரே விம்பிள்டனில் மூன்று இந்திய நட்சத்திரங்கள் கோப்பை வென்று திரும்பினாலும், இங்கு டென்னிசை தேர்வு செய்பவர்கள் எண்ணிக்கை குறைவு தான். பயஸ், சானியா, பூபதி, போபண்ணா என முன்னணி வீரர்கள் அடங்கிய இந்த பொற்காலம், எதிர்காலத்தில் இந்தியாவில் டென்னிசின் புத்துணர்ச்சிக்கு வழிவகுக்கும் என நம்புவோம்.
பாராட்டு மழை:
விம்பிள்டனில் சாதித்த சானியா, பயஸ், நாகலுக்கு பிரதமர் நரேந்திர மோடி, இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் வாழ்த்து தெரிவித்தனர்.
மோடி கூறுகையில், ‘‘இம்முறை விம்பிள்டனில் இருந்து இந்தியாவுக்கு நல்ல செய்திகள் வந்துள்ளன. சாம்பியன் பட்டம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்த சானியா மிர்சா, லியாண்டர் பயஸ், சுமித் நாகல் ஆகியோரது வெற்றிப்
சச்சின் தனது ‘டுவிட்டரில்’ வெளியிட்ட வாழ்த்து செய்தியில், ‘16வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற பயஸ், இளைஞர்களுக்கு ‘ரோல் மாடலாக’ திகழ்கிறார்.
கிராண்ட்ஸ்லாம் தொடரின் பெண்கள் இரட்டையரில் முதன்முறையாக பட்டம் வென்ற சானியா மிர்சா இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார். இவர் நிறைய கோப்பைகள் வென்று சாதிக்க வாழ்த்துக்கள்.
விம்பிள்டன் ஜூனியர் இரட்டையரில் கோப்பை வென்ற சுமித் நாகலுக்கு இது ஆரம்பம் தான். கடினமாக உழைத்து உங்களது கனவுகளை நிறைவேற்றிக் கொள்ள வாழ்த்துகிறேன்.’ என தெரிவித்தார்.

நினைக்கவே இல்லை
‘ஜூனியர்’ கோப்பை வென்ற டில்லியை சேர்ந்த சுமித் நாகல் கூறுகையில்,‘‘ விம்பிள்டன் பட்டம் வென்றதை நம்பவே முடியவில்லை. என்னால் இதுபோன்று ஒரு கோப்பை வெல்ல முடியும் என ஒருபோதும் நினைத்தது இல்லை. மற்றபடி இது இரட்டையர் அல்லது ஒற்றையர் பட்டம் என்றெல்லாம் கிடையாது. விம்பிள்டனில் வென்று விட்டேன், அவ்வளவு தான்,’’ என்றார்.