கடனை திருப்பி செலுத்த தவறிய நாடு கிரீஸ்: ஐரோப்பிய அமைப்பு அதிகாரபூர்வ அறிவிப்பு
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான கிரீஸ், கடந்த 5 ஆண்டுகளாக கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கிறது. அந்நாட்டுக்கு நிதி உதவி அளித்து வந்த ஐரோப்பிய கூட்டமைப்பு, சிக்கன நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு வற்புறுத்தியும் அதை கிரீஸ் நாடு ஏற்காததால், நிதி உதவியை நிறுத்திவைத்தது. இதனால், கிரீஸின் நிலைமை மேலும் மோசமானது.
பன்னாட்டு நிதியத்திடம் பெற்ற கடனில் ஒரு தவணையான ரூ.10 ஆயிரத்து 500 கோடியை கடந்த மாதம் 30-ந் தேதி கெடுவுக்குள் கிரீஸ் செலுத்த தவறியது. இதன்மூலம், கடனை செலுத்த தவறிய முதலாவது வளர்ந்த நாடு என்ற கெட்ட பெயரை பெற்றது. இந்த பொருளாதார நெருக்கடியில் இருந்து விடுபட கிரீஸ் பிரதமர் அலெக்சிஸ் சிப்ரஸ் 2 ஆண்டுகள் கால அவகாசமும், கூடுதல் கடன் உதவியும் கேட்டார். ஆனால், அதை ஐரோப்பிய நாடுகளின் நிதி மந்திரிகள் ஏற்க மறுத்து விட்டனர்.
இந்நிலையில், கிரீஸ் நாடு, ‘கடனை திருப்பி செலுத்த தவறிய நாடு’ என்று நேற்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. அந்நாட்டுக்கு கடன் அளித்து வரும் ஐரோப்பிய நிதி ஸ்திரத்தன்மை அமைப்பு, இந்த அறிவிப்பை வெளியிட்டது. அதே சமயத்தில், கிரீஸ் நாட்டுக்கு கொடுத்த கடன்களை திருப்பி செலுத்துமாறு உடனடியாக கேட்பதில்லை என்றும் முடிவு செய்துள்ளது. ஏனென்றால் அப்படி கேட்டால், யூரோவை பொது நாணயமாக பயன்படுத்தி வரும் ஐரோப்பிய மண்டலத்தில் இருந்து கிரீஸ் வெளியேற வேண்டி இருக்கும். இந்த அறிவிப்பு, கிரீஸ் மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கிடையே, சிக்கன நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்ற ஐரோப்பிய கூட்டமைப்பின் நிபந்தனைகளை ஏற்கலாமா? வேண்டாமா? என்பது பற்றி கிரீஸ் அரசு நாளை (ஞாயிற்றுக்கிழமை) வாக்கெடுப்பு நடத்துகிறது. அதில், ‘ஆம்’ என்று வாக்களிக்கக்கோரி ஒரு பேரணியும், ‘கூடாது’ என்று வாக்களிக்கக்கோரி மற்றொரு பேரணியும் நேற்று நடத்தப்பட்டது.
அந்த வாக்கெடுப்பில் ‘கூடாது’ என்று வாக்களிக்கப்பட்டால், கடன் கொடுத்த நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும் திறனை கிரீஸ் இழந்து விடும் என்று ஐரோப்பிய ஆணைய தலைவர் ஜீன் கிளாட் ஜங்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார். வாக்கெடுப்பை எதிர்த்து கோர்ட்டில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது.



