Breaking News

அதிகமாக சாப்பிடுவதை வெளியேற்றும் கருவி!

உடல் எடை அதிகரிப்பு உலகம் முழுவதும் பெரிய பிரச்சினையாகி வருகிறது. எடை அதிகரிக்காமல் இருப்பதற்குச் சிலர், சாப்பிட்ட உடன் வாந்தி எடுத்து விடுவார்கள். இதை புலிமியா என்பார்கள். புலிமியா போல் வேலை செய்கிறது ’அஸ்பயர் அசிஸ்ட்’ தயாரித்திருக்கும் கருவி. அதிக உணவு சாப்பிட்ட பிறகு, அதை அப்படியே ஜீரணம் செய்ய விடாமல், இரைப்பையில் இருந்து வெளியேற்றி விடுகிறது இந்தக் கருவி. நாக்குக்குச் சுவையும் மூளைக்குச் சாப்பிட்ட திருப்தியும் கிடைக்கும். அதேநேரத்தில் உணவை வெளியேற்றி விடுவதால் கலோரிகளும் உடலில் சேராது.

அமெரிக்காவில் சில நூறு மக்கள் இந்தக் கருவியைப் பயன்படுத்தி வருகிறார்கள். இன்னும் சில மாதங்களில் பிரிட்டனிலும் விற்பனைக்கு வருகிறது. இந்தக் கருவிக்கு ஏராளமான எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன. டீன் கேமென் என்பவர் இந்தக் கருவியைக் கண்டுபிடித்திருக்கிறார். 15 நிமிட அறுவை சிகிச்சையில் வயிற்றில் ஒரு குழாயைப் பொருத்தி விடுகிறார்கள். வயிறு நிறைய சாப்பிட்ட இருபது நிமிடங்களுக்குப் பிறகு, வயிற்றில் பொருத்தப்பட்டுள்ள குழாயில் கருவியை இணைக்க வேண்டும். கருவியில் இருக்கும் தண்ணீர்ப் வயிற்றுக்குள் செல்லும்.

அங்கு ஜீரணம் ஆகாத உணவுகள் இன்னொரு குழாய் மூலம் வெளியே வரும். கழிவறையில் அவற்றை வெளியேற்றிவிட வேண்டும். பிரிட்டன் மருத்துவர் அந்தோனி ஷாண்டே இந்தக் கருவியை வரவேற்று இருக்கிறார். இந்தக் கருவியை உபயோகிப்பதால் தொற்று, நீர்க்கசிவு, குறைவான சத்து, மன அழுத்தம், தற்கொலை எண்ணம் போன்றவை பின்விளைவுகளாக ஏற்படும் என்று எச்சரிக்கிறார்கள் நிபுணர்கள்.