Breaking News

வந்துவிட்டது "கொத்தனார்' ரோபோ: இரண்டே நாட்களில் வீட்டை கட்டி முடிக்கும்

ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரைச் சேர்ந்த பொறியாளர் ஒருவர், மனிதர்களால் காலம் காலமாக கைகளால் செய்யப்பட்டு வந்த செங்கல் சுவர் கட்டும் வேலையை, விரைவில் செய்து முடிக்கும் ரோபோ ஒன்றை வடிவமைத்து இருக்கிறார். வடக்கு இங்கிலாந்தில் கட்டடக் கலையில் சிறந்து விளங்கிய "ஹாட்ரியன்' எனும் ரோமன் பேரரசரை நினைவு கூறும் வகையில், இந்த ரோபோவிற்கு "ஹாட்ரியன்' என பெயரிடப்பட்டுள்ளது. ஹாட்ரியன் ஒரு மணி நேரத்திற்கு 1000 செங்கற்களை கட்டும் திறன் கொண்டது. ஏற்கனவே அதனுள் திட்டமிடப்பட்ட புரோகிராம் படி, தனது 28 அடி நீள கை போன்ற அமைப்பின் மூலம் ஒவ்வொரு செங்கலையும் கலவையுடன் மிகச் சரியாக அவற்றிற்குரிய இடத்தில் வைக்கிறது. ஒரு ஹாட்ரியன், 24 மணி நேரம் தொடர்ந்து வேலை செய்யும் பட்சத்தில், இரண்டே நாட்களில் ஒரு வீட்டை கட்டி முடித்து விடும். எனவே, ஹாட்ரியன் உதவியால் ஒரு வருடத்திற்கு 150 வீடுகளைக் கட்ட முடியும் என அதனை வடிவமைத்தவர் கூறுகிறார். இத்தனைக்கும் இது செங்கற்களை கட்டுவதில், ஒரு அங்குலத்திற்கு நூறில் ஒரு பங்கு துல்லியமாக செயல்படுகிறது. இது மின்சாரம்மூலமாக இயக்கப்படுகிறது. ஹாட்ரியன் ரோபோ நடைமுறைக்கு வரும் போது அமெரிக்கா போன்ற நாடுகளில் கட்டுமான செலவில் மட்டும் வருடத்திற்கு சில ஆயிரம் கோடி டாலர்கள் மிச்சமாகும் என்று தெரிகிறது. அதே நேரம் ஆயிரக்கணக்கானவர்கள் வேலை வாய்ப்பை இழக்கும் அபாயமும் <உள்ளது.
ஆனால், மனிதனை விட விரைவாகவும், துல்லியமாகவும் செயல்படுவதால் இதற்கு எதிர்காலத்தில் நல்ல வரவேற்பு இருக்கும் என நம்பப்படுகிறது. ஹாட்ரியனுக்கு போட்டியாக மனிதனால் ஒரு மணி நேரத்தில் 743 செங்கற்களை மட்டுமே கட்ட முடிந்ததாக சோதனை அடிப்படையில் கண்டறியப்பட்டுள்ளது.