Breaking News

மஹிந்தவை நம்ப முடியாது – மாதுலுவாவே சோபித தேரர்

நாட்டின் நலனுக்காக பல அரசியல் மாற்றங்களை செய்வதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பலம் இருந்த போதிலும் அது அவரால் முடியாமல் போனதென்றால் எதிர்காலத்தில் அதை அவரால் செய்து முடிக்க இயலுமாக இருக்கும் என நம்ப முடியாது என கோட்டை நாக விகாரையின் விகாராதிபதி மாதுலுவாவே சோபித தேரர் தெரிவித்தார்.

அந்த மாற்றங்களையும் கொள்கை நடைமுறைப்படுத்தலையும் மேற்கொள்ள முன்வருமாறு கோரிய போதிலும் எவ்வித பயனும் ஏற்படாததால் அதனை நிறைவேற்றிக் கொள்வதற்கு பொது வேட்பாளராக மைத்திரிபால சிரிசேனவை கொண்டுவரும் நிலை ஏற்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார். 

சுமூக நீதிக்கான மக்கள் இயக்கத்தினால் கோட்டை நாக விகாரையில் நடாத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் தேரர் கருத்து வெளியிட்டார்.

இந்த நாட்டின் அனைத்து மக்களினதும் அதேபோன்று அனைத்துக் கட்சிகளினதும் ஆசியுடன் மைத்திரிபால சிரிசேன வெற்றி பெற்றமை நாட்டின் நலனுக்கான கொள்கைகளின் முன்னிலையிலேயே என்றும் தற்போது அவற்றுள் பல நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மக்களின் மிகப் பெரும் எதிர்பார்ப்பு இருபதாவது திருத்தத்தினைக் கொண்டுவந்து தற்போது நிலவுகின்ற மிக மோசமான தேர்தல் முறையினை மாற்றுவதாகும் எனத் தெரிவித்த தேரர், அதற்காக பாராளுமன்றத்தை சுத்தப்படுத்துவதற்கு இதுவே சிறந்த தருணம் எனவும் தெரிவித்தார்.

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் உச்ச பயனைப்பெற்று உறுதிமிக்க அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்துவதற்கு மக்களை விழிப்பூட்டுவதாகவும் அவர் தெரிவித்தார்.

சுதந்திரம் கிடைத்த நாள் தொடக்கம் நாம் பிழையான பாதையிலேயே பயணித்துள்ளோம் எனவும் இதுவரை காலமும் நடைபெற்று வந்ததெல்லாம் மனிதர்களை அதிகாரத்தில் அமர்த்துவதேயாகும் எனத் தெரிவித்த தேரர், மக்களின் கொள்கைகளை அதிகாரத்தில் அமர்த்துவதற்கான காலம் தற்போது உதயமாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 
நமது நிருபர்