பிலிப்பைன்சில் படகு கவிழ்ந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 56 ஆக அதிகரிப்பு: உரிமையாளர் மீது வழக்கு...
பிலிப்பைன்சில் நேற்று முன்தினம் 173 பயணிகளுடன் சென்ற படகு கடலில் கவிழ்ந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 56 ஆக அதிகரித்துள்ளது. மேலும் அதில் பயணம் செய்த 18 பணியாளர்கள் உள்பட 145 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.
அந்நாட்டின் லெய்டே மாகாணத்திற்குட்பட்ட ஓர்மோக் நகரில் இருந்து செபுவுக்கு கிழக்கே உள்ள காமோட்டெஸ் தீவுக்கு அக்கப்பல் சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் கடலில் வீசிய சூறாவளி காற்றில், திடீரென 27 மீட்டர் நீளம் கொண்ட அப்படகு கடலில் மூழ்கியது. இதையடுத்து அங்கு விரைந்த கடலோர காவல்படை வீரர்கள் கடலில் விழுந்து உயிருக்கு போராடியவர்களையும், சடலங்களையும் மீட்டதாக லெப்டினன்ட் கிறிஸ்டோபர் கேனட் கூறினார்.
உயிருடன் மீட்கப்பட்ட அனைவரும், ஓர்மோக்கை சுற்றியுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் படகு கடலில் மூழ்கியதற்கு ஊழியர்களின் கவனக்குறைவே காரணம் என இவ்விபத்தில் உயிர் தப்பியவர்கள் கூறினர். தங்களை கொல்லவேண்டும் என்ற உள்நோக்கத்துடன் பணியாளர்கள் செயல்பட்டதாக அவர்கள் குற்றம் சாட்டினர். இதையடுத்து படகின் கேப்டன் உள்ளிட்ட 18 பணியாளர்கள் மீதும் வழக்கு பதியப்பட்டுள்ளது.
அதே போல் இப்படகின் உரிமையாளர் மீதும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதில் குற்றச்சாட்டுகள் நிரூபணமானால் அந்நாட்டு சட்டப்படி குற்றவாளிகளுக்கு 40 வருட சிறை தண்டனை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.



