Breaking News

இரட்டைக் குழந்தை பெற்றுக்கொடுத்த வாடகை தாய்க்கு பணம் தரவில்லை : போலீஸ் இல் புகார்

வாடகை தாயாக இருந்து இரட்டைக் குழந்தைகளை பெற்றுக்கொடுத்த பெண்ணுக்கு பேசியபடி ரூ.20 லட்சம் தராமல் ஏமாற்றியதாக தனியார் ஆஸ்பத்திரி மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

வாடகை தாய்
இந்தியாவின் சென்னை மற்றும் சுற்றுவட்டாரத்தில் கணவனால் கைவிடப்பட்டவர்கள், கணவனை பிரிந்து வாழ்பவர்கள், வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள பெண்களை குறிவைத்து ஒரு கும்பல் வாடகை தாயாக செயல்பட்டால் லட்சக்கணக்கில் பணம் கிடைக்கும் என்று கூறி ஏமாற்றி வருகிறது.
சென்னை புறநகர் பகுதி ஒன்றில் மூன்று பிள்ளைகளின் தாயான சத்யா கணவனைப்பிரிந்து வாழ்ந்து வருகின்றார். வறுமை சத்தியாவை வாட்டி வதைக்க, என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கும் போது அதேபகுதியை சேர்ந்த தமிழ் என்ற பெண் சத்தியாவிற்கு அறிமுகமானார். சத்தியாவின் வறுமையை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட தமிழ், சத்தியாவிடம் வாடகை தாயாக செயல்படுவது குறித்து விளக்கம் அளித்தார். தனது அக்காவும் வாடகை தாயாக இருந்து குழந்தை பெற்றுக்கொடுத்து தற்போது வசதியாக வாழ்ந்து வருவதாகவும் கூறினார்.

அதேபோல சத்தியாவும் வாடகை தாயாக செயல்பட்டால் குடும்ப கஷ்டம் நீங்கி வசதியாக வாழ முடியும் என்று கூறினார். அதற்கு ஒரு குழந்தைக்கு ரூ.10 லட்சம் கிடைக்கும் என்றும் இரண்டு குழந்தைகள் பெற்றுக் கொடுத்தால் ரூ.20 லட்சம் வரை பணம் கிடைக்கும் என்று கூறினார். இதனை நம்பி சத்தியா வாடகை தாயாக செயல்பட ஒப்புக்கொண்டார்.

இரட்டை குழந்தை

சத்தியா 10 மாதங்களுக்கு முன்பு சென்னை வளசரவாக்கம், திருமால் நகர் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். சத்தியாவின் கருவில் குழந்தை வேண்டுபவரின் விந்தணுவை ஊசி மூலம் மருத்துவர்கள் செலுத்தி கருவுறச் செய்தனர். 

கரு வளர்வது முதல் குழந்தை பிறக்கும் வரை குழந்தைக்கு வேண்டிய சத்தான ஆகாரங்களுக்கான செலவுகள் சத்தியாவுக்கு வழங்கப்பட்டது. மேலும் மாதம் ரூ.7 ஆயிரம் வீதம் 8 மாதங்களுக்கு சத்தியாவிற்கு பணம் கொடுக்கப்பட்டது. கடந்த 4-ந் தேதி சத்தியாவிற்கு சிசேரியன் மூலம் இரட்டை குழந்தைகள் பிறந்தது. குழந்தை பிறந்த உடனே அந்த குழந்தைகளை மருத்துவர்கள் எடுத்துச் சென்றுவிட்டனர். 

பேசிய பணம் தரவில்லை

குழந்தை சுகப்பிரசவமாக தான் பிறக்கும் என்று மருத்துவர்கள் கூறியதாகவும், ஆனால் ஆபரேஷன் மூலமே குழந்தை பிறந்துள்ளது. தற்போது சத்தியா உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதால் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிகிறது. இதுவரை தருவதாக கூறிய ரூ.20 லட்சம் பணத்தை தரவில்லை. சுமார் ரூ.1 லட்சம் வரை மட்டுமே கொடுத்துவிட்டு மருத்துவர்கள் மிகவும் அலட்சியமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

எனவே அந்த தனியார் மருத்துவமனை மீதும், இதுபோல் அப்பாவி ஏழை பெண்களை குறிவைத்து வாடகை தாயாக செயல்பட வைத்து ஏமாற்றும் கும்பல் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சத்தியாவின் உறவினர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து சத்தியாவின் தாய் சுசீலா மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வளசரவாக்கத்தில் உள்ள ராயலா நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து ராயலா நகர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

தங்கையும் வாடகை தாயாக

சத்தியாவின் தங்கை தனலட்சுமியும் தற்போது ஒரு வாடகை தாயாக இந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து தனலட்சுமி கூறியதாவது:-

எனது கணவர் பிரிந்து சென்றுவிட்டார். தற்போது நானும் ஒரு வாடகை தாயாக உள்ளேன். எனது வயிற்றில் தற்போது ஒரு குழந்தை வளர்ந்து வருகிறது. அதற்கு ரூ.7 லட்சம் வரை பணம் கொடுப்பதாக தெரிவித்தனர். அதற்காக பல்வேறு பத்திரங்களில் கையெழுத்து வாங்கி உள்ளனர். பெரும்பாலும் சுகப்பிரசவம் தான் நடக்கும் என்று தெரிவித்துள்ளனர். 

குழந்தை பிறக்கும் நேரத்தில் கண்ணை கட்டிவிடுவார்கள். காதுகளில் பஞ்சை வைத்து அடைத்துவிடுவார்கள். பிறந்த உடனே அந்த குழந்தையை நமது கண்களில் காட்ட மாட்டார்கள். அந்த குழந்தை யாரிடம் வளர்கிறது என்பதுகூட நமக்கு தெரியாது. குடும்ப சூழல் காரணமாக தான் இந்த செயலில் ஈடுபட்டுள்ளேன் என்றார்.