ஸ்பெயினில் முதியோர் காப்பகத்தில் தீ விபத்து: 8 பேர் பலி
ஸ்பெயினில் உள்ள முதியோர் காப்பகம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 பேர் பலியானார்கள். 10-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
ஸ்பெயினின் வடகிழக்கு நகரமான சரகோசா அருகே ஒரு முதியோர் காப்பகம் செயல்பட்டு வந்தது. இந்த காப்பகத்தில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் 8 முதியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
இதுகுறித்து உள்துறை அலுவலகத்தின் செய்தி தொடர்பாளர் கஸ்டவோ கூறுகையில் ‘‘இந்த தீ விபத்து இன்று காலை நடைபெற்றுள்ளது. இந்த விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்’’ என்றார்.
‘‘மூன்று மாடி கொண்ட அந்த காப்பகத்தின் முதல் மாடியில் உள்ள படுக்கையறையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அதன்பின் தீ மற்ற இடங்களுக்கு பரவியது. அங்குள்ளவர்கள் கொடுத்த தகவலின்படி தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தார்கள்’’ என்று செய்தி தொடர்பாளர் கார்லோஷ் கரில்லா தெரிவித்தார்.



