Breaking News

ஸஹ்ரான் மௌலவியும் ஸகர் நேரமும்

மர்சூக் அஹமட் லெப்பை

எங்களுடைய நோன்பை ஆரம்பிக்கும் நேரத்திலும் தற்போது பிரச்சினை ஏற்பட்டுள்ளது. பொதுவாக எங்களுடைய அமல்கள் காலம், நேரம் குறிப்பிடப்பட்டுத்தான் விதியாக்கப்பட்டிருக்கின்றது. நோன்பானது முஸ்லிம்களின் 9வது மாதமான றமழான் மாதத்தில் நோற்க வேண்டுமென விதியாக்கப்பட்டிருக்கின்றது. அதிலும் பஜ்ருடைய நேரத்திலிருந்து மஃரிபுடைய நேரம் வரை உண்ணாமலும் பருகாமலும் இருந்து நோன்பை கடமையாக்கும்படி பணிக்கப்பட்டிருக்கின்றோம். அதுபோல தொழுகை நேரங்களிலும், ஐவேளை தொழுகை நேரங்களையும் இஸ்லாம் எங்களுக்கு தெளிவாக வரையறுத்து கூறியுள்ளது. அதே போல ஹஜ்ஜுடைய கடமைகளையும் எமது இஸ்லாமிய வருடத்தின் இறுதி மாதமான துல்ஹஜ் மாதத்தில் நிறைவேற்ற பணிக்கப்பட்டிருக்கின்றது. அதே போல ஸக்காத்தும் ஒரு வருடம் முடிந்த கையிருப்பில் உள்ள தங்கம்,பணத்திற்கு ஸகாத் கடமையாக்கப்பட்டிருக்கின்றது. 

இவ்வாறு எந்த அமல்களை எடுத்துக்கொண்டாலும் நேரம், காலத்தை தெளிவாக சந்தேகமின்றி இஸ்லாம் எடுத்துக்கூறுகின்றது. இதிலேதான் தற்போது காத்தான்குடி தேசிய தௌகீத் ஜமாத்தை சேர்ந்த சஹ்ரான் மௌலவி சகர் செய்யும் நேரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கின்றார். அதாவது நாங்கள் தற்போது சுபஹு தொழுகைக்காக அதான் சொல்கின்ற 4 மணி 30 நிமிடம் பிழை. இது நபி (ஸல்) அவர்கள் வரையறுத்துக்கூறிய நேரத்திற்கு பிழையானது என்கின்றார். 'வைகறை எனும் வெள்ளைக்கயிறு இரவு எனும் கறுப்பு கயிரில் இருந்து தெளிவாகும் வரை உண்ணுங்கள், பருகுங்கள்' என அல்குர்ஆன் கூறுகின்றது. 

இதிலிருந்து பஜ்ரின் ஆரம்ப நேரமும் சஹர் முடிவு நேரமும் ஒன்று என புலனாகின்றது. 

நபி(ஸல்) அவர்கள் பஜ்ரை இரண்டாக பிரிக்கின்றார். அவை பொய்யான பஜ்ர், உண்மையான பஜ்ர் ஆகும்;. முதலாவது வெளிச்சம் பொய்யான பஜ்ர் ஆகும். வானம் தெளிவான உள்ள காலத்தில் அடிவானத்தில் நிலைக்குத்தாக அதாவது செங்குத்தாக தூணைப்போன்று தோற்றமளிக்கும் வெளிச்சத்தை பொய்யான வெளிச்சம் என்று இஸ்லாம் அடையாளப்படுத்துகின்றது. இந்த வெளிச்சமானது சுபஹு தொழுகைக்கு அடையாளமோ, நோன்பாளி சகர் உணவை நிறுத்தி கொள்வதற்குரிய அடையாளமோ அல்ல. இதனை அறிவியலில் சோடியாக்கள்லைட் (Zodiacal Light) என்றழைக்கின்றனர். சூரிய மண்டலத்தில் பூமிக்கு வெளியே இருக்கும் தூசி மண்டலத்தில் சூரிய ஒளிபட்டு எதிரொளிப்பதால், இந்த செங்குத்தான ஒளி ஏற்படுகின்றது. இவ்வாறு ஏற்படும் பொய்யான பஜ்ர் ஆனது உண்மையான பஜ்ர்க்கு ஏரத்தாள 20 நிமிடங்களுக்கு முன்நிகழும் என வானியல் அறிஞர்கள் கூறுகிறார்கள்.

உண்மையான பஜ்ர் ஆனாது 2வது வெளிச்சமாகும். இது அடிவானம் வழியே கிடைமட்டமாக வலது மற்றும் இடது புறமாக பரவும் வெள்ளைக்கோடு ஆகும். இதுதான் சுபஹு தொழுகையின் ஆரம்ப நேரமும் சஹர் முடிவு நேரமும் ஆகும்.

இதிலே சஹ்ரான் மௌலவியின் வாதம் என்னவென்றால் நமது நாட்டிலே தொழுகைக்கான அதான் கிட்டத்தட்ட 4.30 மணியளவிலே சொல்லப்பட்டு தொழுகை நிறைவேற்றப்படுகின்றது. இது பொய்யான பஜ்ர்க்கும் முந்திய நேரமாகும். இவர்கள் அதான் சொல்லி ஏரத்தாள 30 அல்லது 40 நிமிடங்களின் பின்னர்தான் உண்மையான பஜ்ர் ஆரம்பமாகின்றது. றமழான் காலத்தில் உண்மையான பஜ்ர்க்கு முன்னதாகவே இன்னும் சொல்லப்போனால் பொய்யான பஜ்ர்க்கு முன்னதாகவே சுபஹ் தொழுகையை நிறைவேற்றிவிட்டு மக்கள் கலைந்து சென்றுவிடுகின்றார்கள். இருட்டில் பாங்கு சொல்லி இருட்டில் தொழுது முடிக்கிறார்கள் என்கிறார் சஹ்ரான் மௌலவி.

சஹ்ரான் மௌலவி சொல்வது போல் தவறு காணப்படுகிறதா என்பதை நாங்கள் விரிவாக ஆராய வேண்டும். ஏனெனில் இது வானியல் சம்பந்தமாக விஞ்ஞான பூர்பமாக ஆராயக்கூடிய பிரச்சினையாகும். அகில இலங்கை ஜம் இய்துல் உலமாவும் ஏனைய வானியல் அறிஞர்களும் சஹ்ரான் மௌலவியும் இணைந்து இலங்கையில் சுபஹ் விடயத்தில் தவறு நடைபெறுகிறதா என்பதை விரிவாக ஆராய வேண்டும்.

அதிகாலை நேரத்திலே விடியலுக்குரிய இந்த வெளிச்சம் எந்த நேரத்தில் உருவாகிறது என்று கிழக்கிற்கு சென்று துல்லியமாக துறைசார்ந்த அறிஞர்கள் ஆராய்ச்சியில் ஈடுபட வேண்டும். உண்மையிலே இலங்கையிலே பஜ்ர் நேரத்தில் தவறு ஏற்பட்டிருந்தால் அதனை உடனடியாக திருத்த ஆவண செய்யவேண்டும். ஏன்னெனில் இது மார்க்கம். இதுவரை தவறு நடைபெற்றிருந்தாலும் இனியாவது சரியாக செய்ய வேண்டும். இதே தவறின் படியே செல்லவேண்டும் என்பது நியதியல்ல.

தமிழ்வாணன் (கறுப்பு கண்ணாடியார்) எழுதுகின்றார் முன்னொரு காலத்தில் 'ஈ' க்கு 4 கால்கள் என்ற நம்பிக்கை இருந்து வந்ததாம். 'ஈ' க்கு 4 கால்கள் என்று யாரோ சொன்னதை வைத்து மனித இனம் அவ்வாறு நம்பி வந்தது. யாருக்கும் 'ஈ' ஐ பிடித்து எத்தனை கால்கள் என்று பாரக்க வேண்டும் என்று தோன்றவில்லை பின்னர் நீண்ட காலத்தின் பின் 'ஈ' ஐ பிடித்த ஆராய்ந்த போது அதற்கு 6 கால்கள் உண்டு என்று கண்டு பிடிக்கப்பட்ட பின்னர்தான் 'ஈ' க்கு 6 கால் உண்டு என்ற கருத்து மனிதர்கள் மத்தியில் நிலவத்தொடங்கியது என தமிழ்வாணன் எழுதுகின்றார்.

இதே போல இப்போதும் நமது மக்கள் மத்தியில் அன்னப்பறவைக்கு தண்ணீரையும் பாலையும் பிரித்து அருந்தும் தன்மை இருப்பதாக நம்புகின்றோம். இது  தவறான நம்பிக்கையாகும். உண்மையில் அன்னத்திற்கு நீரையும் பாலையும் பிரித்து அருந்தும் தன்மையில்லை. அன்னம் என்பது சோறு சோற்றுக்குத்தான் பாலையும் நீரையும் பிரிக்கும் தன்மை உண்டு என்று சொல்கின்றார்கள்.

எங்களுடைய மெத்தை பள்ளிவாயலில் நடைபெற்ற ஒரு சம்பவத்தை நான் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். சுமார் 20 வருடங்களுக்கு முன் மெத்தை பள்ளிவாயல் அமைந்திருக்கும் திசை பிழை. அதனுடைய கிப்லா பிழை என சந்தேகிக்கப்பட்டது. வருடத்தில் ஒரு நாள் வரும் அன்று கஃபாவிற்கு மேல் சூரியன் சரி நேராக வரும். அந்த நாளில் கிப்லாவை அறிந்து கொள்ள முடியும். இந்த குறித்த தினத்தில் நாங்கள் நாட்டின் பல பாகங்களிலும் உள்ள கிப்லா பார்க்கும் பல அறிஞர்களை வரவழைத்து பெருமளவு பணம் செலவு செய்து கிப்லா பார்க்கப்பட்டது. ஏற்கனவே இருந்த கிப்லா பிழை என்பது நிருபனமானது. அன்று பகல் 2.30 மணியளவில் கிப்லா பிழை என்பது தெரிந்ததும் அன்று அசர் தொழுகைக்கு புதிய கிப்லா நிர்ணயிக்கப்பட்டு, நிர்ணயிக்கப்பட்ட புதிய கிப்லாவிலே தொழுகை நடாத்தப்பட்டது. அப்போது நான் மெத்தை பள்ளிவாயல் தலைவராக இருந்தேன். எங்களுடைய முன்னோர்களான மு.இ.மு., ஆவன்னா மானா ஹாஜியார், அஹமட் லெப்பை போன்றோர் தொழுது வந்த கிப்லா இது. இதனை நாங்கள் மாற்ற மாட்டோம். என நாங்கள் அடம்பிடிக்கவில்லை. தவறு என்று தெரிந்த மறுகணமே சரியான கிப்லாவை நோக்கி தொழுகை நடாத்தப்பட்டது. 

எனவே சஹர் நேரத்தில் தவறு இருந்தால் அதனை நாங்கள் திருத்த வேண்டும். இந்த நேர தவறினால் நோன்புக்குக்கூட பாதிப்பில்லை. ஆனால் நிச்சயமாக இது சுபஹ் தொழுகையில் பாதிப்பு ஏற்படுத்தும். இது விஞ்ஞான பூர்வமாக வானியல் அறிஞர்களை கொண்டு தீர்வு காணக்கூடிய பிரச்சினைதான் இதில் சிக்கல்கள் எதுவுமே இல்லை. நாங்கள் பாரக்க வேண்டியது பஜ்ர் சம்பந்தமான குர்ஆன் வசனம் சரியானதா?, கதீஸ்கள் சரியானவையா? என பார்த்து கிழக்கிலே விடியும் நேரத்தில் தோன்றுகின்ற வெளிச்சத்தையும் வைத்து அறிவு பூர்வமாக தீர்மானிக்க முடியும். அதை விட்டு விட்டு 'ஈ' க்கு நான்கு கால்தான், அன்னப்பறவைக்கு நீரையும் பாலையும் பிரிக்கும் சக்தி உண்டு என அடம்பிடிக்காமல் சுபஹ் நேரத்தை உண்மையாக அறிந்து அதன்படி புதியதொரு நேர அட்டவணை தயாரிக்கப்ட்டு, அதன்படி தொழ அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவும் ஏனைய துறைசார்ந்த அறிஞர்களும், சஹ்ரான் மௌலவியும் முன்வந்து புதியதொரு சர்ச்சை மார்க்த்தில் ஏற்பட இடமளியாது தீர்வு காணவேண்டும் என்பதே அல்லாஹ்வின் நல்லடியார்களின் விருப்பமாகும்.