Breaking News

தேர்தல் தொடர்பில் மக்களை விழிப்பூட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் .

தேர்தல் தொடர்பில் மக்களை விழிப்பூட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் . 

உலமாக்களும் தஃவா அமைப்புக்களும் தேர்தல் தொடர்பில் மக்களை விழிப்பூட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் பொறியியலாளர் எம்.எம்.அப்துர் ரஹ்மான் பகிரங்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை (24) காத்தான்குடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலைக்கு முன்பாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஆகியவை இணைந்த கூட்டணியின் இரண்டாவது தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் முன்னாள் சூறா சபை உறுப்பினரும், காத்தான்குடி நகர சபையின் முன்னாள் உறுப்பினருமான ஏ.ஜீ.எம்.ஹாறூன் தலைமையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் உரையாற்றுகையில், தேர்தல் களம் இப்போது சூடுபிடித்துள்ளது. மக்களை உண்மையான தகவல்களைச் சொல்லி சரியான முடிவுகளை நோக்கி வழிநடாத்த வேண்டிய தருணத்தில் பொய்களையும் புரட்டுகளையும் சொல்லி மக்களை வழிகெடுப்பதுதான் தேர்தல் பிரச்சாரம் என்று சொல்லுகிற அளவுக்கு நிலைமை நமது நாட்டில், நமது பிரதேசத்தில், நமது சமூகத்தில் மோசமாகி இருக்கிறது. தேர்தல் வந்துவிட்டாலே பொய்களும் கட்டுக்கதைகளும் ஆபாண்டங்களும் நாளாந்த விஷயங்களாக மாறிவிடுகின்றன. ஆதனால்தானோ என்னவோ அரசியல் பிரச்சாரங்களில், தேர்தல் பிரச்சாரங்களில் சொல்லப்படுகின்ற விடயங்களை நமது மக்களும் பெரிதாக காதில் போட்டுக்கொள்ளாத நிலையும் இருக்கிறது. ஆனால் இந்த நிலைமைகளுக்கு மாற்றமாக நாம் நடத்துகின்ற ஒவ்வொரு பிரச்சாரக் கூட்டங்களிலும், நமது ஒவ்வொரு மக்கள் சந்திப்பிலும் நாம் மிகுந்த பொறுப்புணர்வுடன் மக்களுக்குச் சொல்லுகின்ற ஒவ்வொரு அம்சங்களும் உண்மையாகவும் சரியாகவும் நேர்த்தியாகவும் உறுதிப்படுத்தப்பட்டதாகவும் இருக்க வேண்டுமென்பதில் நாம் பொறுப்பாக இருக்கின்றோம். அதனால்தான் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி நடத்துகின்ற பல தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களை மக்கள் அறிவு பெறுவதற்காக, விழிப்புப் பெறுவதற்காக, உண்மைத் தகவல்களை தெரிந்து கொள்வதற்காக நோக்குகின்ற நிலைமை இருக்கிறது. எதிர் அரசியல் கட்சி ககோதரர்கள் கூட நல்லாட்சிக்கான தேசிய முன்னணியில் மேடையில் பேசப்படுகின்ற விடயங்களில் உண்மைக்குப் புறம்பான விடயங்கள் இருக்காது என அவர்களுக்குள்ளேயே பேசிக்கொள்கின்ற அளவுக்கு நாம் நேர்த்தியாக இவ்விடயத்தை பொறுப்புடன் செய்துவருகின்றோம். அதன் விளைவு கடந்த பத்து வருடங்களில் இந்தப் பிரதேசத்திலும் ஏனைய பல பிரதேசங்களிலும் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய பல மாற்றங்களை எம்மால் செய்ய முடிந்திருக்கின்றது. 

கடந்த இருபத்தைந்து வருடங்களாக பாராளுமன்ற உறுப்பினர்களாக இருபபவர்களுக்குக் கூட பாராளுமன்றப் பதவியிலிருந்து, பாராளுமன்ற அதிகாரத்தைப் பயன்படுத்தி மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பது கூட தெரியவில்லை. அங்கே கொழும்பிலே ஒதுக்கப்படுகின்ற பணத்தினை கொண்டு வருவதற்கு ஊரில் இருந்து ஒருவர் அங்கு செல்ல வேண்டிய அவசியம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. அரசாங்கம் மக்களுக்கு பணம் ஒதுக்க வேண்டுமாக இருந்தால் இங்குள்ள பிரதேச செயலகத்தின் மூலம் நிதியினை ஒதுக்கி வீதிகளைப் போடலாம், கட்டடங்களைக் கட்டலாம். சிலநேரம் அது கெரிசன் இல்லாமல் கொந்தராத்து இல்லாமல் சுத்தமாக நடக்கும். ஆனால் பாராளுமன்றப் பதவி என்பது அங்கே கொழும்புக்குப் போய் அங்கிருந்து காசைக் கொண்டுவந்து பள்ளி கட்டுவது வெல்கம் போர்ட் கட்டுவது, குப்பையைக் கொட்டி ஆற்றங்கரையை  நிரப்புவது போன்ற விடயங்களோடு சம்பந்தப்பட்டதாக இருபத்தைந்து வருடங்களாக பாராளுமன்றத்தில் இருப்பவர்கள் கூட நினைத்திருக்கிறார்கள். மிகவும் துரதிஷ்டம். பாராளுமன்ற பதவியைப் பயன்படுத்தி செய்ய வேண்டிய காரியங்களை அவர்கள் ஏன் இதுவரை செய்யவில்லை என்பது இப்போதுதான் எமக்கு விளங்குகிறது. என்ன செய்ய வேண்டும் என்பது அவர்களுக்குத் தெரியாது. அவர்களைக் குற்றம் சொல்வதில் எந்தப் புண்ணியமும் இல்லை.

ஆற்றங்கரையிலே குப்பை கொட்டி மைதானம் அமைப்பது முட்டாள்தனமான வேலைத்திட்டமாகும். ஒரு நீர்நிலையை நிரப்பி காணியைப் பெறுவதாக இருந்தால் அதற்கு தனியான தொழில் நுட்பம் இருக்கிறது. குப்பைகளை கொட்டி நிரப்பிய பின்னர் அதற்கு மேலாக மைதானம் அமைப்பதொன்பது படு முட்டாள்தனமான செயற்பாடாகும். 

சிறுபிள்ளைத்தனமான காரணங்களைச் சொல்லி வாக்குக் கேட்கிறார்கள். இவர்களுக்கு ஓன்றில் பாராளுமன்றத்திற்குச் சென்று என்ன செய்வதென்று அவர்களுக்குத் தெரியாது அல்லது செய்யவேண்டிய காரியங்களைப் பட்டியல் போட்டால் இதையெல்லாம் கடந்த காலங்களில் செய்தீர்களா என்று மக்கள் கேள்வி கேட்கத் தொடங்கி விடுவார்கள்.  

பொதுமக்களின் பணத்தைப் பயன்படுத்தி வீதி அமைப்பது பாராளுமன்றத்தின் கடமையல்ல அதற்கு வேறு நிறுவனங்களும் திணைக்களங்களும் இருக்கின்றன. ஆனால் பாராளுமன்ற உறுப்பினர், பாராளுமன்ற கட்டமைப்பு, பாராளுமன்ற அதிகாரம், பாராளுமன்றத்திற்கு ஊடாக அமைக்கப்படுகின்ற குழுக்கள் இவற்றைப் பயன்படுத்தி செய்யப்பட வேண்டிய ஏராளமான சமூக தேசிய பாரதூரமான பணிகள் இருக்கின்றன. 

யாருக்கும் கண்ணை மூடிக்கொண்டு வாக்களிக்க வேண்டிய அவசியம் இல்லை. மிகத் தெளிவாக நாம் விடயங்களைச் சொல்கிறோம். பொய்களைப் பேசவில்லை உண்மைகளைப் பேசுகின்றோம். அமையப்போகின்ற பாராளுமன்றம் என்னென்ன விடயங்களை செய்யப்போகிறது என்பதை நாம் முன்வைக்கின்றோம். இப்போது அந்தக் கடமைகளைச் செய்வதற்கு யார் பொருத்தமானவர் என்பதை மக்கள் யோசிக்க வேண்டும்;.  

அரசியலில் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க கெட்டுவிடவில்லை, சுமந்திரன் கெட்டுவிடவில்லை. நமது முஸ்லிம் சமூகத்திலிருந்து கெட்டுவிடமாட்டார்கள் என்ற நம்பிக்கை நிறைந்த நேர்மையான பிரதிநிதிகளை நாம் இதுவரை தெரிவு செய்யவில்லை. நாம் எதை விதைக்கிறோமோ அதைத்தான் அறுவடை செய்ய முடியும். என்ன தரத்தை எந்தத் தகுதியைக் கொண்டவரை நாம் தெரிவுசெய்கிறோமோ அந்த விளைவைத்தான் நாம் பாராளுமன்றத்தில் எதிர்பார்க்கலாம். இம்முறை பாராளுமன்றத் தேர்தலில் அறிவுபூர்வமாக இந்த விடயத்தைப் பாhக்க வேண்டும். 

இவ்விடத்தில் உலமாக்களுக்கும், தஃவா அமைப்புக்களுக்கும் பகிரங்க வேண்டுகோள் ஒன்றை விடுக்க விரும்புகின்றேன். தேர்தல் தொடர்பில் மக்களை விழிப்பூட்டுகின்ற கடமை உங்களுக்கு இருக்கிறது. தயவு செய்து அதனைச் செய்யுங்கள். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் எங்களது உலமாக்கள், எங்களது தஃவா அமைப்புக்கள் இந்த மாற்றத்தை ஏற்படுத்துவதில் அரசியல் கட்சிகளை விடவும் அதிக பங்களிப்பினைச் செய்தார்கள், மக்களை வழிப்பூட்டுவதில் அதிக பங்களிப்பினைச் செய்தார்கள். அதற்காக நேரடியாக எந்தக்கட்சிக்கும் வாக்களிக்குமாறு கோரத் தேவையில்லை. மக்கள் எதனை அடிப்படையாகக் கொண்டு தமது வாக்குரிமைகளைப் பயன்படுத்த வேண்டும், நம்மை முன்னோக்கி இருக்கின்ற பாராளுமன்றப் தேர்தலின் பெறுமதி என்ன? தெரிவு செய்யப்படுகின்ற ஒவ்வொருவரினதும் கடமையும் பொறுப்பும் என்ன அந்தக் கடமையையும் பொறுப்பினையும் நிறைவேற்றுவதாக இருந்தால் அவர் எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும் என்கின்ற பொதுவான விதிகளையும் தகைமைகளையும் வழிகாட்டுதல்களையும் சொன்னால் மேடைகளில் அலங்கார பசப்பு வார்த்தைகளைக் கூறி பொய்களைக் கூறி வழிகெடுக்கின்ற அந்த அபாயத்திவிருந்து மக்களைப் பாதூகாக்க முடியும், அது ஒரு சமூகக்  கடமையாகவும் மாறியிருக்கிறது. ஏனென்றால் அந்த வழிகாட்டுதல் இந்த முறை தேர்தலில் இல்லாமல் போனால் மீண்டும் இந்தப் பொய்களுக்கு கட்டுப்பட்டு நமது மக்கள் முடிவெடுத்தால் அடுத்த ஐந்து வருடங்களுக்கு நாம் துன்பப்படவேண்டிவரும், துயரப்படவேண்டிவரும். 

நாம் இங்கு தெரிவு செய்து அனுப்புகின்ற ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினரும் தேசிய அளவில் தாக்கம் செலுத்துபவராக இருக்கின்றார் என்பதை நாம் மறந்துவிக்கூடாது. நமது சமூகத்தை தேசிய அளவில் காப்பாற்ற வேண்டியது, அதற்காகக் குரல் கொடுக்க வேண்டியது, தேசிய நலனில் பங்காற்றி நமது உரிமைகளை வென்றெடுக்க வேண்டியது அவரது கடமை. ஆந்த வகையில் தேசியக் கடமையினை நிறைவேற்ற வேண்டிய பாரிய பொறுப்பிருக்கின்றது.     

மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அவருடைய பதவிப் பேராசை காரணமாக தொடர்ந்தும் தானும் தனது குடும்பமும் ஆட்சியில் இருப்பதற்காக 18ஆவது திருத்தச் சட்டத்தைக் கொண்டுவந்தார். இரண்டு முறையோடு  ஜனாதிபதி பதவியில் இருக்க முடியாது என்ற சட்டத்தை மாற்றி மீண்டும் மீண்டும் பதவியில் இருக்கக்கூடிய சட்டத்தைக் கொண்டுவந்தார். தான் அவ்வாறு ஜனாதிபதியாவதை உறுதிப்படுத்துவதற்காக சகிக்க முடியாத பயங்கரமான இனவாதத்தை, பேரினவாதத்தை இந்த நாட்டிலே தொடக்கிவைத்தார். அதனை குறுகிய காலத்திற்குள் நமது மக்களுடைய பிரார்த்தனை, முயற்சி அதேபோன்று இந்த நாட்டின் பல சமூகத் தலைவர்கள் அத்தனை பேருடைய முயற்சியினாலும் அந்த சதியை, அந்த நிலைமையை, அந்த அபாயத்தை தோற்கடிக்க முடிந்தது. ஆனால் அந்த அபாயத்தை மீண்டும் உயிர்ப்பிக்கின்ற முயற்சியில்தான் இங்கு வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடுகின்ற அனைவரும் இருக்கின்றார்கள். எம்மைச் சூழ்ந்திருந்த அபாயத்தை நாம் எவ்வாறு ஜனவரி 08ஆந் திகதி தோற்கடித்தோமோ அதனை பாராளுமன்ற அதிகாரத்தின் மூலமாக மீண்டும் கொண்டுவர துயற்சிக்கிறார்கள். 

மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்துவிட்டு தற்போது குருநாகலில் போட்டியிடுவது வெறுமனே பாராளுமன்ற உறுப்பினராக இருப்பதற்கல்ல. ஜனாதிபதியாக இருந்து  தோற்டிக்கப்பட்டதன் பின்னர் கடந்த ஆறு மாதத்தில் தன்னால் முடிந்த அத்தனை சதிகளையும் செய்து பார்த்தார். பின் கதவால் அதிகாரத்திற்கு வந்து, மைத்திரியின் கைகளை முடக்கி, அவரை பணயக் கைதியாக மாற்றி மீண்டும் பாராளுமன்ற அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான அத்தனை சதிகளையும் செய்து பார்த்தார். ஒன்றும் செல்லுபடியாகவில்லை.

நமது தலையாய சமூகக் கடமை இந்த சதித்திட்டத்தை முறியடிக்க வேண்டும். நீங்களும், நாங்களும், இந்த நாட்டிலுள்ள மக்களுமாகச் சேர்ந்து ஜனவரி 08ஆந் திகதி எந்த அபாயத்தை நாம் தேற்கடித்தேமோ அதனை மீண்டுமொரு சதித் திட்டத்தின் மூலம் கொண்டு வருவதற்கான சூழ்ச்சியாகவே வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடுகின்றார்கள். மட்டக்களப்பில் வெற்றிலைக்கு அளிக்கப்படுகின்ற வாக்கு குருநாகலில் போட்யிடுகின்ற மஹிந்தவுக்கு உதவாதாம். உதவும் இரண்டு வகைகளில் உதவும். மஹிந்த அவர்களின் தலைமையில் போட்டியிடுகின்ற அந்தக் கட்சிக்கு பல தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டுவருவதற்கு அது உதவும். அந்தத் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்களிலே ஒரு இனவாதி, ஒரு தீவிரவாதி, முஸ்லிம்களுக்கும் இந்த நாட்டுக்கும் விரோதமானவன் பாராளுமன்ற உறுப்பினராவதற்கு உதவும் எனவும் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் தெரிவித்தார்.

இந்தப் பிரச்சாரக் கூட்டத்தில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் அம்பாறை பிராந்திய செயற்குழு உறுப்பினர் சட்டத்தரணி றிபாஸ், பொறியியலாளர் பழுலுல் ஹக், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், காத்தான்குடி நகர சபையின் முன்னாள் தவிசாளரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய கொள்கைப பரப்புச் செயலாளருமான யூ.எல்.எம்.என்.முபீன், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் காத்தான்குடி இளைஞர், காங்கிரஸ் அமைப்பாளர் இல்மி அஹமட் லெப்பை, காத்தான்குடி நகர சபையின் முன்னாள் தவிசாளர் மர்சூக் அஹமட் லெப்பை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் காத்தான்குடி மத்திய குழு உறுப்பினர் றஹீம், நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தேசிய அமைப்பாளர் அஷ்ஷெய்க் எம்.பீ.எம்.பிர்தௌஸ் (நளீமி) ஆகியோர் உட்பட பெருந்திரளான வாக்காளர்களும் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 
நமது நிருபர்