Breaking News

கறுப்பு பணத்தை வெள்ளையாக்க முயற்சி: கிரீஸ் அரசின் ரகசிய திட்டம் பலனளிக்குமா?

ஏதென்ஸ் : கிரீசில் நேற்று முன்தினம் நடைபெற்ற பொது ஓட்டெடுப்பில், 'ஐரோப்பிய நாடுகள் நிர்பந்திக்கும் சிக்கன நடவடிக்கையை அமல்படுத்த வேண்டாம்' என, 61.31 சதவீத மக்கள் ஓட்டளித்துள்ளனர். சிக்கனத் திட்டத்திற்கு, 38.69 சதவீதம் பேர் ஆதரவளித்துள்ளனர். இதற்கிடையில், சுவிஸ் வங்கியில், கிரீஸ் மக்கள் பதுக்கியுள்ள, 14 லட்சம் கோடி ரூபாயை, உள்நாட்டுக்குத் திருப்பும், கிரீஸ் அரசின் முயற்சி வெற்றி பெறுமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

ஐரோப்பிய யூனியனில் உள்ள கிரீஸ் நாடு, கடன் நெருக்கடியில் சிக்கியுள்ளது. அக்கூட்டமைப்புக்கான மத்திய வங்கியிடமிருந்து வாங்கிய கடனின் தவணையை திருப்பிச் செலுத்தாததால், சிக்கன நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு, சில நிபந்தனைகளை விதித்தது, ஐரோப்பிய யூனியன்.இதற்கு எதிர்ப்பு தெரிவித்த, கிரீஸ் பிரதமர் அலெக்சிஸ் சிப்ரஸ், மக்களிடம் பொது ஓட்டெடுப்பு நடத்தினார். நேற்று முன்தினம் நடந்த ஓட்டெடுப்பில், 61.31 சதவீத மக்கள், ஐரோப்பிய யூனியனுக்கு எதிராக ஓட்டளித்தனர். இது, தன் கொள்கைக்கு கிடைத்த வெற்றியாக, கிரீஸ் பிரதமர் கருதுகிறார்.அதே சமயம், 'சிக்கனத் திட்டத்திற்கு பெரும்பான்மை ஓட்டுகள் கிடைத்தால், பதவி விலகுவேன்' என்று கூறி வந்த, கிரீஸ் நிதியமைச்சர் யானிஸ் வரோபகிஸ், நேற்று, திடீரென பதவியை ராஜினாமா செய்து, பரபரப்பை ஏற்படுத்தினார்.

ஐரோப்பிய கூட்டமைப்புடன், பிரதமர் அலெக்சிஸ் சிப்ரஸ் பேச்சு நடத்தி, கடன் பிரச்னைக்கு சுமுக தீர்வு காணவே, தான் பதவி விலகியதாக, யானிஸ் தெரிவித்துள்ளார்.பொது ஓட்டெடுப்பு முடிவு தெரிந்ததும், அடுத்த கட்ட பேச்சில், தன்னை, 'தள்ளி' இருக்குமாறு, சில ஐரோப்பிய நாடுகள் நிர்பந்தித்ததால், தான் ராஜினாமா செய்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதற்கிடையே, ஐரோப்பிய ஆணைய தலைவர் ஜீன்-கிளாட் ஜங்கர், நேற்று காலை, 'டெலி கான்பரன்ஸ்' மூலம், ஐரோப்பிய மத்திய வங்கி தலைவர் மரியோ டிராகி, ஐரோப்பிய குழு தலைவர் ஜெரோன் டிசல்பிளம் ஆகியோரிடம், கிரீஸ் விவகாரம் குறித்து கலந்தாலோசித்தார். மறுபுறம், ஜெர்மனி, பிரான்ஸ் நாடுகளின் நிதியமைச்சர்கள், வார்சாவில் கூடி, விவாதித்தனர். அதன்பின், அவர்கள், பிரசல்சில் நடைபெற்ற, ஐரோப்பிய நிதியமைச்சர்கள் கூட்டத்திலும் பங்கேற்றனர்.நேற்று இரவு, ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்கல், பாரீசில் பிரான்ஸ் அதிபர் பிரான்காய்ஸ் ஹாலண்டை சந்தித்து, கிரீஸ் பிரச்னை குறித்து ஆலோசித்தார்.

இதற்கிடையே, ஐரோப்பிய கூட்டமைப்பு, இன்று கிரீஸ் விவகாரம் குறித்து விவாதிப்பதற்காக, அவசரக் கூட்டத்தைக் கூட்டியுள்ளது.இக்கூட்டத்தை தொடர்ந்து, கிரீஸ் பிரச்னையில் தனது நிலைப்பாட்டை, ஐரோப்பிய கூட்டமைப்பு இன்று அறிவிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

கறுப்பு பணம் - சலுகை:

மூடப்பட்டுள்ள கிரீஸ் வங்கிகளில் பணப் புழக்கம் வெகுவாகக் குறைந்து விட்டது. ஓரிரு நாளில், ஏ.டி.எம்.,களும் காலியாகி, நிதிச் சந்தை ஸ்தம்பிக்கும் நிலை ஏற்படலாம் என, அஞ்சப்படுகிறது. இதையடுத்து, சுவிஸ் வங்கிகளில் பதுக்கியுள்ள கறுப்பு பணத்தை, 21 சதவீதம் வரி செலுத்தி, 'வெள்ளை'யாக மாற்றிக் கொள்ளலாம் என, கிரீஸ் அரசு சலுகை வழங்கியுள்ளது.சுவிஸ் வங்கிகளில், கிரீஸ் மக்கள், 14 ஆயிரம் கோடி முதல், 14 லட்சம் கோடி ரூபாய் வரை பதுக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதில், குறிப்பிடத்தக்க தொகை உள்நாட்டிற்கு வந்தால், ஐரோப்பிய நாடுகளின், 'கரிசன' பார்வை கிடைக்கும் வரை, சமாளிக்கலாம் என, கிரீஸ் அரசு கருதுகிறது.

நேரடி பாதிப்பில்லை:

நமது பொருளாதாரம் ஸ்திரமாக உள்ளது. போதுமான அன்னியச் செலாவணி கையிருப்பும் உள்ளது. அதனால், கிரீஸ் பிரச்னை, இந்தியாவைப் பாதிக்காது. அதே சமயம், டாலர் மதிப்பு உயரும் என்பதால், அதற்கு நிகரான ரூபாய் மதிப்பு குறையும். அதுவும் தற்காலிகமாகத் தான் இருக்கும்.
- அரவிந்த் சுப்ரமணியன், 
நிதியமைச்சக தலைமை பொருளாதார ஆலோசகர்

பங்குச் சந்தைகள்::

* கிரீஸ் பிரச்னையால், ஐரோப்பிய, ஆசிய பங்குச் சந்தைகள் காலையில் சரிவை சந்தித்து, மாலையில் சுதாரித்துக் கொண்டன. டாலருக்கு நிகரான யூரோ மதிப்பு, 0.5 சதவீதம் சரிவடைந்துள்ளது.

வெளியேற வாய்ப்புள்ளது:

* நிபந்தனைகளை கிரீஸ் ஏற்றுக் கொண்டால், மூன்றாவது நிதியுதவித் திட்டத்தை ஸ்பெயின் ஆதரிக்கும் 
- லுாயிஸ் டி குண்டாஸ், நிதி அமைச்சர்

* ஐரோப்பிய மண்டலம் பேச்சு மூலம் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்
-இங்கிலாந்து பிரதமரின் செய்தி தொடர்பாளர்

* நாளைய (இன்று) ஐரோப்பிய கூட்டமைப்பு கூட்டம், கிரீசுக்கு சாதகமாக இருக்காது
- ஷெல்லிங், ஆஸ்திரியா நிதி அமைச்சர்

*கிரீஸ், ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேற சாத்தியம் உள்ளது
- ஜே.பி.மார்கன் வங்கி

கிரீஸ் சிக்கலுக்கு தீர்வு காண்பதற்கான வாயில்கள் இன்னும் திறந்தே உள்ளன
- ஜோவன்வேன் ஓவர்ட்வெல்ட், பெல்ஜியம் நிதி அமைச்சர்