Breaking News

நள்ளிரவுடன் தேர்தல் பிரசார பணிகளை நிறைவு செய்யாதோர் கைது செய்யப்பாடுவர் நாடளாவிய ரீதியாக விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள்.

தேர்தல் முடியும்வரை அமைதியான நிலமைகளை பேனுவதன் பொருட்டு நாட்டின் பல பாகங்களில் தற்போது காவல்துறையின் விசேட படையணிகள் பாதுக்காப்பு  பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளர் ரூவான் குணசேகர தெரிவித்தார்.  

தேர்தல் வன்முறைகள் அதிகம் இடம்பெறும் பகுதிகளுக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். எதிர்வரும் 17ஆம் திகதி இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலுக்காக பிரசார நடவடிக்கைகள் இன்று நள்ளிரவுடன் நிறைவுக்கு வருகின்றன. இதன்படி, சகல தேர்தல் பிரசார நடவடிக்கைகளையும் இன்று நள்ளிரவுடன் நிறைவுக்கு கொண்டுவருமாறு மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம் எம் மொஹமட் அறிவித்துள்ளார்.

அத்துடன், தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளுக்கு இன்று நடத்தும் பேரணிகளில் ஒன்றை நள்ளிரவு 12 மணிவரையில் நடத்திச் செல்வதற்கு தேர்தல்கள் ஆணையாளர் அனுமதி அளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். பொதுவாக தேர்தல் பிரசார கூட்டங்களை இரவு 10 மணியுடன் நிறைவு செய்ய வேண்டும்.

இதனிடையே, தேர்தலின் போது விருப்பு வாக்குகள் எண்ணப்படும் இடத்திற்கு, போட்டியிடும் ஒரு வேட்பாளரின் சார்பில் ஒரு பிரதிநிதி வீதம் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த பிரதிநிதிக்கு 11 பதினொரு மணிக்கு பிறகே அங்குச் செல்ல முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, தேர்தல் காலத்தில் தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டின் பேரில் இதுவரையில் 729 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அச்சிடப்பட்டிருந்த சுமார் 800 சுவரொட்டிகளை கண்டியில் உள்ள அச்சகம் ஒன்றில் இருந்து நேற்று கைப்பற்றப்பட்டுள்ளன. இதன்போது 7 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதுபோல் பதுளை - பிங்காரவ பிரதேசத்தில் அமைக்கப்பட்டிருந்த ஜே வி பியின் கட்சி காரியாலயத்திற்கு நேற்று இரவு இனந்தெரியாதவர்களால் தீவைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இன்று நள்ளிரவுக்கு பின்னர் தேர்தல் பிரசார பணிகளில் ஈடுபடுபவர்களை கைது செய்ய நாடளாவிய ரீதியாக விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தலைமையகம் அறிவித்துள்ளது.