முற்றாக அழியும் நிலையில் உள்ள விலங்கினங்களை காப்பாற்றும் நோக்கில் ஔியூட்டப்பட்ட அமெரிக்காவின் எம்பயர் ஸ்டேட் கட்டிடம்
நியூயோர்க் நகரில் உள்ள பிரபல எம்பயர் ஸ்டேட் கட்டிடம் அழியும் நிலையில் உள்ள விலங்கினங்களை காப்பாற்றும் நோக்கத்தில் நேற்றிரவு வர்ணஜால ஒளி வெள்ளத்தில் மிதந்தது. அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் 102 மாடிகளைக் கொண்ட எம்பயர் ஸ்டேட் கட்டிடம் உள்ளது. உச்சியில் உள்ள கூம்பு முனையுடன் சேர்த்து 443 மீட்டர் உயரமுள்ள இந்த கட்டிடத்தின் முன்னர் (உள்ளூர் நேரப்படி) நேற்றிரவு ஆயிரக்கணக்கான மக்கள் வானத்தை அண்ணார்ந்து பார்த்தபடி நின்றிருந்தனர். திடீரென, அந்த கட்டிடத்தில் எரிந்து கொண்டிருந்த அத்தனை விளக்குகளும் அணைந்து அப்பகுதியில் நிசப்தம் நிலவியது. ‘ஒரு மெழுகுவர்த்தி’ என்ற தலைப்பில் பிரபல இசையமைப்பாளர்கள் ஜே.ரால்ப் மற்றும் சியா ஆகியோர் வனவிலங்களை பாதுகாக்கப்பட வேண்டிய அவசியம் குறித்து உருவாக்கிய பாடலின் பின்னணியில் அருகாமையில் உள்ள பல கட்டிடங்களில் இருந்து சுமார் 40 ப்ரொஜெக்டர்கள் எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தின் மீது அடுத்தடுத்து ஒளி வெள்ளத்தை பாய்ச்சின. அழிவின் உச்சகட்ட விளிம்பு நிலையில் உள்ள பனிச் சிறுத்தை, ஆசிய யானைகள், ஆகியவற்றின் உருவங்கள் உயிரோட்டமாக உலா வந்தன. வாத்து உள்ளிட்ட பறவையினங்கள், பூச்சிகள், கடல்வாழ் உயிரினங்கள் உள்ளிட்ட அத்தனை அழிவு நிலையில் உள்ள உயிரினங்களும் சுமார் 3 மணி நேரத்துக்கு எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தின் மீது வண்ணமயமான ஒளிக் காட்சியாக பிரதிபலிக்கப்பட்டன. இதை சிலிர்ப்புடன் கண்டு வியந்து ரசித்த மக்கள் உற்சாக மிகுதியால் கூக்குரல் எழுப்பி, மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். “Racing Extinction” என்ற தலைப்புடன் எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தை ஒளியூட்டிய இந்த நிகழ்ச்சிக்கு சுமார் ஒரு கோடி டொலர் செலவாகியிருக்கலாம் என ஊடகங்கள் மதிப்பிட்டுள்ளன.







