முதல் டெஸ்ட் போட்டியில் முரளி விஜய் விளையாட மாட்டார்
இலங்கையுடனான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய தொடக்க ஆட்டக்காரர் முரளி விஜய் காயம் காரணமாக விளையாட மாட்டார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதில் தொடக்க ஆட்டக்காரராக கே.எல். ராகுல் சேர்க்கப்பட்டுள்ளார். ஆகஸ்ட் 12ம் தேதி முதல் டெஸ்ட் போட்டி காலே நகரில் தொடங்குகிறது. இந்த நிலையில் முரளி விஜய்க்கு கையில் காயம் ஏற்பட்டதால் அவரால் ஆட முடியாத நிலை ஏற்பட்டது. முதல் டெஸ்ட் போட்டிக்குள் அவர் சரியாகி விடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் காயம் சரியாகவில்லை. இதையடுத்து அவருக்குப் பதில் கே.எல். ராகுல் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஷிகர் தவானுடன் இணைந்து ராகுல் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்குவார் என்று இன்று இந்திய அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய அணியின் இயக்குநர் ரவி சாஸ்திரி செய்தியாளர்களிடம் கூறுகையில், முரளி விஜய் முழுமையாக குணமடையவில்லை. தொடர்ந்து அவர் ஓய்வில் இருந்து வருகிறார். அவரை வைத்து ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை. காரணம், காயம் மேலும் அதிகரித்து விட்டால் அடுத்து வரும் 2 போட்டிகளுக்கு சிக்கலாகி விடும். முரளி விஜய் நல்ல பார்மில் உள்ள வீரர். எனவே அவர் விளையாடாதது பின்னடைவுதான். நீண்ட நேரம் நின்று ஆடக் கூடியவர் முரளி விஜய். அவரது அனுவத்தை நாங்கள் முதல் டெஸ்ட்டில் மிஸ் செய்வோம் என்றார். சமீப காலமாக இந்திய அணிக்கு நல்ல தொடக்கத்தைக் கொடுத்து வந்தார் முரளி விஜய். இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, வங்கதேசம் ஆகிய தொடர்களில் சிறப்பாக ஆடியுள்ளார். 32 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள முரளி விஜய், 2338 ரன்களை குவித்துள்ளார். 6 சதம் இதில் அடக்கம். அவரது சராசரி 41.75 ஆகும்.