படத்துல சீன் இல்லையா... கவலை வேண்டாம்.. யூடியூபில் பார்க்கலாமே!
படத்தின் நீளம் மற்றும் காட்சிகளில் வன்முறை ஆபாசம் ஆகியவை அதிகம் இருந்தால் அத்தகைய காட்சிகளை சென்சார் போர்டு வெட்டித் தள்ளுவது வழக்கம். நீக்கப்பட்ட அந்தக் காட்சிகளை சில இயக்குனர்கள் அடுத்த படத்தில் பயன்படுத்திக் கொள்வார்கள். சில பேர் அதனை அப்படியே விட்டுவிடுவார்கள், முன்பு ஹாலிவுட் படங்களின் காட்சிகள் இவ்வாறு நீக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட பட நிறுவனங்களே அதனை யூடியூபில் வெளியிட்டு விடுவார்கள். படத்தின் புரோமோஷன் மற்றும் விளம்பரங்கள் போன்று இந்த வெட்டப்பட்ட காட்சிகளை ஹாலிவுட்டினர் பயன்படுத்தி வந்தனர், தற்போது அது தமிழ் சினிமாவிலும் நடைமுறைக்கு வந்துள்ளது. படத்தின் நீளம் கருதி சென்சார் போர்டு வெட்டிதள்ளிய காட்சிகளை படத்தின் தயாரிப்பாளர் வாங்கி யூ டியூபில் வெளியிடுவது, படத்தில் நீக்கப்பட்ட தனது காட்சிகளை சம்பந்தப்பட்ட காமெடி நடிகர் வாங்கி யூடியூபில் வெளியிடுவது போன்ற செயல்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்து வந்தன. ஹாலிவுட் போன்று தமிழிலும் வெட்டப்பட்ட காட்சிகளுக்கென தனி வெப்சைட் தொடங்க சிலர் முயற்சிக்க, இதைத் தெரிந்து கொண்ட தயாரிப்பாளர் சங்கம் தயாரிப்பாளர்களை அழைத்து நீங்களே வெளியிடுங்கள் இதனால் உங்களுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கும் என்று கூறி இருக்கிறது.( யூடியுபில் நிகழ்ச்சிகளின் இடையே ஓடும் விளம்பரங்களுக்கு ஒரு குறிப்பிட்ட சதவீத வருமானத்தை சம்பந்தப்பட்டவர்களுக்கு யூ டியூப் அளிக்கும்). ஆஹா இது நல்ல வழியாக இருக்கின்றதே என்று நினைத்த தயாரிப்பாளர்கள் தற்போது படத்தில் வெட்டப்படும் காட்சிகளை தாங்களே யூடியூபில் வெளியிட முடிவு செய்து இருக்கின்றனர். இனி இத வச்சும் படத்துக்கு வெளம்பரம் தேடுவாங்களோ?



