இறுதி முடிவு மாயாதுன்னயிடம்
மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) சார்பான தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ஏற்பது தொடர்பாக முன்னாள் கணக்காளர் நாயகமான சரத்சந்திர மாயதுன்ன தனது முழுமையான விருப்பை வெளிப்படுத்தியிருக்காத நிலையில், அவர் அப்பதவியை ஏற்றுக் கொள்வது குறித்துச் சந்தேகம் காணப்படுவதாக, அக்கட்சி நேற்றுத் தெரிவித்துள்ளது. தனது நிலைப்பாட்டை மாயாதுன்ன இன்னமும் உத்தியோகபூர்வமாக வெளிப்படுத்தியிருக்காத போதிலும், ஏனைய கட்சிகளால் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களாக அறிவிக்கப்பட்டுள்ளவர்களுடன் இணைந்து செயற்படுவதில் அவர் தயக்கத்தைக் காட்டுவதைப் போல் காணப்படுவதாக, அக்கட்சியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்தார். "அவர் இராஜினாமா செய்யும் பட்சத்தில், ஜே.வி.பி.யின் தேசியப் பட்டியல் மூலமாக இன்னுமொரு பொருத்தமான நபரை நியமிப்போம். மாயாதுன்ன இன்னமும் எங்கள் தெரிவு என்பதால், இன்னமும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை" என டில்வின் சில்வா மேலும் தெரிவித்தார்.



