Breaking News

அபுதாபியில் உள்ள ஷேக் ஜயீத் மசூதிக்கு சென்று செல்ஃபி எடுத்த மோடி

அமீரகம் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி அபுதாபியில் உள்ள பிரபல ஷேக் ஜயீத் மசூதிக்கு சென்றார். அப்போது அவர் அங்கு செல்ஃபி எடுத்தார். பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் சுற்றுப்பயணமாக ஞாயிற்றுக்கிழமை ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ளார். 34 ஆண்டுகள் கழித்து அமீரகம் சென்றுள்ள முதல் இந்திய பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது. மோடி அபுதாபியில் உள்ள உலகப் புகழ் பெற்ற ஷேக் ஜயீத் மசூதிக்கு சென்றார். உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து வரவழைக்கப்பட்ட மார்பிள் கற்களால் அந்த மசூதி கட்டப்பட்டுள்ளது. அமீரக அதிகாரிகள் மோடிக்கு மசூதியை சுற்றிக் காண்பித்தனர். மேலும் அதன் கட்டிடக் கலை குறித்த விவரங்களையும் அவருக்கு விளக்கிக் கூறினர். இந்நிலையில் மோடி அமீரக ஷேக்குகளுடன் சேர்ந்து மசூதியில் செல்ஃபி எடுத்துக் கொண்டார். மோடி வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் செய்கையில் செல்ஃபி எடுப்பது புதிது அன்று. இது குறித்து மோடி ட்விட்டரில் கூறியிருப்பதாவது, இளவரசர் ஷேக் நஹ்யான் பின் முபாரக் அல் நஹ்யான் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் அன்வர் கர்காஷ் ஆகியோருடன் ஷேக் ஜயீத் மசூதியில். #Selfie என்று தெரிவித்துள்ளார்.