Breaking News

வெற்றிகரமாக பூமிக்கு திரும்பிய 3 விண்வெளி வீரர்கள்... விண்ணில் 879 நாட்கள் இருந்து படல்கா சாதனை

சர்வதேச ஆய்வு மையத்தில் இருந்து மூன்று விண்வெளி வீரர்கள் பத்திரமாக பூமிக்குத் திரும்பியுள்ளனர். இவர்களில் ரஷ்ய விண்வெளி வீரர் கென்னடி படல்கா 879 நாட்கள் விண்வெளியில் தங்கியிருந்து புதிய சாதனை படைத்துள்ளார். பால்வெளி மற்றும் மற்ற கிரகங்கள் குறித்து சர்வதேச அளவில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்தவகையில் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கி விண்வெளி வீரர்கள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர். இந்நிலையில், ரஷ்ய விண்வெளி வீரரான கென்னடி படல்கா, கஜகஸ்தான் விண்வெளி வீரர் ஐட்யன் அமெடெவ் மற்றும் டென்மார்க் விண்வெளி வீரர் ஆண்ட்ரியாஸ் ஆகியோருடன் திட்டமிட்டபடி, ரஷ்யாவின் சோயுஸ் விண்கலம் மூலம் கஜகஸ்தானில் பத்திரமாக தரையிறங்கினர்.

நேரில் வரவேற்பு... இந்த 3 வீரர்களையும் கஜகஸ்தான் நாட்டு அதிபர் நர்சுல்தான் நசார்பயேவ் நேரில் வந்து வரவேற்றார். இந்த விண்வெளி பயணம், உக்ரைன் நெருக்கடி நிலை காரணமாக ரஷ்யா மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு இடையே சர்வதேச ஒருங்கிணைப்பை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

புதிய சாதனை... அதோடு, இந்தப் பயணத்தின் மூலம் விண்வெளியில் அதிக நாட்கள் தங்கியவர் என்ற சாதனையைப் படைத்துள்ளார் படல்கா. இவர் இதுவரை ஐந்து வெவ்வேறான பயணங்களின் மூலம் இதுவரை விண்வெளியில் 879 நாட்கள் தங்கியுள்ளார்.

செர்ஜி கிரிகெலேவ்... இதற்கு முன் ரஷ்ய விண்வெளி வீரர் செர்ஜி கிரிகெலேவ் 803 நாட்கள் 9 மணி நேரம் 41 நிமிடங்கள் விண்வெளி நிலையத்தில் இருந்து சாதனை படைத்திருந்தார். தற்போது செர்ஜியின் சாதனையை படல்கா முறியடித்துள்ளார்.

4 முறை... சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்திற்கு 4 முறை சென்று உள்ள ஒரே விண் வெளி வீரர் என்ர பெருமையும் படல்காவையே சேரும். முதல் பயணத்தை 1998ம் ஆண்டு மேற்கொண்டார். 2வது முறையாக 2009ல் சென்ற அவர் 199 நாட்கள் அங்கு தங்கியிருந்தார்.