ஊவா மாகாண முதலமைச்சராக சாமர சம்பத் தசநாயக்க நியமனம்.
எம்.ஐ.அப்துல் நஸார்
ஊவா மாகாண முதலமைச்சராக சாமர சம்பத் தசநாயக்க ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
2009ஆம் ஆண்டு தொடக்கம் ஊவா மாகணசபை உறுப்பினராக கடமையாற்றிய சாமர சம்பத் தசநாயக்க 2014ஆம் ஆண்டு ஊவா மாகாண விளையாட்டு, இளைஞர் விவகார, மின்சார, கைத்தொழில், சிறு கைத்தொழில் மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சராகவும் செயற்பட்டுள்ளார்.
முன்னாள் ஊவா மாகாண முதலமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ கடந்த பொதுத் தேர்தலில் அதிக விருப்பு வாக்குகளைப்பெற்று பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டதையடுத்து சாமர சம்பத் தசநாயக்கவுக்கு முதலமைச்சுப் பதவி கிடைத்துள்ளது.
ஹரீன் பெர்னாண்டோ முதலமைச்சராவதற்கு முன்னர் 2014ஆம் ஆண்டு நடைபெற்ற ஊவா மாகாணசபைத் தேர்தலில் அதிகூடிய ஆசனங்களைப் பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் சஷீந்திர ராஜபக்ஷ முதலமைச்சராக நியமிக்கப்பட்டார். பின்னர் கூட்டமைப்பிலிருந்து சில உறுப்பினர்கள் விலகியதன் காரணமாக அதிக ஆசனங்கள் ஐக்கிய தேசியக் கட்சிக்குக் கிடைத்தது.
புதிய முதலமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள சாமர சம்பத் தசநாயக்க கடந்த பொதுத் தேர்தலில் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.



