எதிர்க்கட்சித் தலைமைத்துவத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்கியது ஜனநாயகத்திற்கு முரணானது...
எதிர்க்கட்சித் தலைமைத்துவம் வழங்கியது ஜனநாயகத்திற்கு முரணானது என மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் 56 பேர் கையொப்பமிட்ட ஆவணம் சபாநாயகருக்கு கையளிக்கப்பட்டிருந்த நிலையில் 16 பேரைக் கொண்ட கட்சியொன்றிற்கு எதிர்க்கட்சித் தலைமைத்துவத்தை வழங்கியது தவறானதும் ஜனநாயகத்திற்கு முரணானதுமாகும்.
பாராளுமன்றம் மீண்டும் 15ஆந் திகதிக்குப் பின்னரே கூடவுள்ளது. அதற்கு முன்னதாக சபாநாயகரைச் சந்தித்து சரியான தீர்மானமொன்றை எடுக்குமாறு கேட்கவுள்ளோம் எனவும் அவர் தெரிவித்தார்.
இதனிடையே, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச கருத்துத் தெரிவிக்கையில் நாட்டுக்கு துரோகமிழைக்கும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தினை செயற்படுத்துவதற்காக அரசு பின்தங்கியதொரு எதிர்க்கட்சியை நியமித்துள்ளது எனத் தெரிவித்தார்.
அதேவேளை, பிவிதுரு ஹெல உறுமய பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கருத்துத் தெரிவிக்கையில் தமிழ் பிரிவினை வாதத்திற்கு அரசு அடிபணிந்துள்ளதாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிர்க்கட்சி தலைமைத்துவத்தை வழங்கியதன் மூலம் இது தெளிவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
எம்.ஐ.அப்துல் நஸார்