பேரழிவை ஏற்படுத்தும் அதிநவீன ஏவுகணைகள்... உலக நாடுகளை அச்சுறுத்திய சீனாவின் ராணுவ அணிவகுப்பு
தங்கள் நாட்டின் வலிமையை பறைசாற்றும் அதி நவீன ஏவுகணைகள் கொண்ட ராணுவ அணி வகுப்பைக் கண்டு உலக நாடுகள் அதிர்ச்சியடைந்துள்ளன. சீன மக்களுக்கு எதிரான ஜப்பான் ஆக்ரமிப்பு மற்றும் உலக பாசிச எதிர்ப்பு போரில் வெற்றி பெற்ற 70-வது தினம் பெய்ஜிங்கில் கொண்டாடப்பட்டது.
இந்த 70-வது நினைவு தினத்தைக் குறிக்கும் வகையில் சீனா மாபெரும் ராணுவ அணிவகுப்பை நடத்தியுள்ளது. இந்த அணிவகுப்பில் 12,000 ராணுவ வீரர்கள் பங்கேற்றனர். தியானன்மென் சதுக்கத்தில் நடைபெற்ற இந்த அணிவகுப்பைப் பார்க்க ஆயிரக்கணக்கானவர்கள் குவிந்திருந்தனர். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், தென்கொரிய அதிபர் ஆகியோர் இதில் பங்கேற்று பேரணியைப் பார்வையிட்டனர். இந்த அணிவகுப்பில் பேரழிவை ஏற்படுத்தும் அதிநவீன விமானம் தாக்கும் ஏவுகணைகள் பங்கேற்றன. கண்டம் கண்டம் பாயும் ஏவுகணைகள், டாங்கிகள், கவச வாகனங்களும் இந்தப் பேரணியில் அணிவகுத்து வந்தன. முக்கியமாக, மேம்படுத்தப்பட்ட டி.எப். -21டி (DF-21D) மற்றும் டி.எப்.-26 (DF-26) ஏவுகணைகள் இந்த பேரணியில் காட்சிப்படுத்தப்பட்டன. இதில் டி.எப். -21டி ஏவுகணை சுமார் 900 கடல் மைல்கள் தாண்டிச் சென்று விமானம் தாங்கிய போர் கப்பல்களை தாக்கி அழிக்கும் சக்தி கொண்டது. அதேபோல் டி.எப்.-26 (DF-26) ஏவுகணை அணு ஆயுதங்களை தாங்கி 1,800 மற்றும் 2,500 மைல்கள் பாய்ந்து சென்று தாக்கும் சக்தி படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இது பற்றி பிரபல அமெரிக்க ஊடகங்கள் கவலை தெரிவித்து செய்தி வெளியிட்டு வருகின்றன.