போர்க்குற்றங்களை தெளிவாக வெளிக்காட்டிய அறிக்கை! - சோசலிச ஊடகக் கூட்டமைப்பு
இலங்கையின் போர்க்குற்றங்களை ஐ.நா. அறிக்கை தெளிவாக வெளிக்காட்டியிருப்பதாக சோசலிச ஊடகக் கூட்டமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அந்த கூட்டமைப்பின் இணையச் செய்தித்தளத்தில் கட்டுரையொன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்தச் செய்தியில் தொடர்ந்தும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
தற்போது வெளியிடப்பட்டிருக்கும் ஐ.நா. மனித ஆணையத்தின் அறிக்கை அமெரிக்க சார்பான இலங்கையின் தற்போதைய அரசுக்கு சாதகமான முறையில் வெளியிடப்பட்டுள்ளது.
எனினும் குறித்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள தகவல்கள் காரணமாக இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பில் ஒரு தெளிவான விளக்க அறிக்கையாக இது அமைந்துள்ளது.
விடுதலைப் புலிகளுடனான போர் நடைபெற்ற காலத்தில் மட்டுமன்றி அதற்குப் பின்னரான காலகட்டங்களிலும் கூட இலங்கையில் போர்க்குற்றங்கள் நடைபெறவே செய்தன.
போரினால் இடம்பெயர்க்கப்பட்ட மக்கள் மெனிக் பார்ம் பகுதியில் இடைத்தங்கல் முகாம்களில் அடைக்கப்பட்டமை, அங்கு தங்கியிருந்த இளைஞர்களை புலிகளுக்கு ஆதரவானவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் படையினர் கடத்திச் சென்று சித்திரவதைகளுக்கு உள்ளாக்கி காணாமல் போகச் செய்த சம்பவங்களும் போர்க்குற்றமாகவே கருதப்பட வேண்டும்.
அவற்றுக்கும் உரிய நியாயம் கிடைக்கச் செய்வதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



