அமெரிக்க ஓபன் டென்னிஸ் நடந்த மைதானத்திற்குள் நொறுங்கி விழுந்த ட்ரோன்! வீராங்கனைகள் பீதி
மெரிக்க ஓபன் டென்னிஸ் நடைபெறும் அரங்கத்தில் ட்ரோன் எனப்படும் ஆளில்லா குட்டி விமானம் நொறுங்கி விழுந்தது. அந்த பகுதியில் பார்வையாளர்கள் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவத்தால் மைதானத்தில் ஆடிக்கொண்டிந்த வீராங்கனைகள் கடும் அச்சம் அடைந்தனர். அமெரிக்க ஓபன் டென்னிஸ் நியூயார்க்கில் நடந்துகொண்டுள்ளது. உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் இதில் பங்கேற்று ஆடி வருகின்றனர். ஆம்ஸ்ட்ராங் மைதானத்தில் நேற்று இரவு, நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டம் ஒன்றில் இத்தாலியின் ஃபிளாவியா பென்னேட்டா மற்றும் ரொமானியாவின் மோனிகா நிகுலெஸ்கு ஆகியோர் மோதினர்.
ஆட்டம் பரபரப்பாக நடந்து கொண்டிருந்தபோது, திடீரென பார்வையாளர் மாடத்தில் பயங்கர சத்தம் கேட்டது. இதனால் சேர் நடுவர் ஆட்டத்தை நிறுத்த உத்தரவிட்டார். போலீசார் விரைந்து சென்று பார்த்தபோது, படம் பிடிக்க பயன்படும் குட்டி விமானம் நொறுங்கி கிடந்தது தெரியவந்தது. அதை அப்புறப்படுத்திய பிறகு விளையாட்டு தொடர்ந்தது. 10 ஆயிரம் ரசிகர்கள் அமரும் வசதி கொண்ட அந்த ஸ்டேடியத்தில் விமானம் விழுந்த பகுதியில் ரசிகர்கள் யாரும் இல்லை. எனவே பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இதுபற்றி ஃபிளாவியா பென்னாட்டா கூறுகையில், நான் பயந்து போனது உண்மை. வெடிகுண்டு வெடித்துவிட்டதாகவே நினைத்து அஞ்சினேன். வெகு நேரம் கழித்துதான் உண்மை நிலவரம் தெரியவந்தது என்றார். இவர் அப்போட்டியில் 6-1 மற்றும் 6-4 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.