'படையினருக்கு எதிராக புலிகளை சாட்சியாக்கும் முயற்சியில் அரசாங்கம் '
அரசாங்கத்தினால் முன் மொழியப்பட்டுள்ள கலப்பு நீதிமன்றத்தில் ஆயுதப் படைகளுக்கு எதிரான சாட்சியங்களாக நிறுத்துவதற்காக, சிறைச்சாலைகளில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களை விடுவிக்க அரசாங்கம் திட்டமிட்டு வருகின்றது என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்ச, நேற்று ஞாயிற்றுக்கிழமை (18) குற்றஞ்சாட்டியுள்ளார். இத்திட்டம் பற்றி அரசாங்கத்துக்கு நெருக்கமான வட்டாரங்கள் தன்னிடம் கூறியதாக அவர் கூறினார். இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, எமது படைகளை யுத்தக் குற்றவாளிகள் ஆக்குவதற்காகவா எமது மக்கள், மைத்திரி - ரணில் கூட்டு அரசாங்கத்துக்கு வாக்களித்தனர்? கலப்பு நீதிமன்ற அமர்வுக்கு தயார் செய்யப்படுதவற்காக சில மாதங்களில் தமிழீழ விடுதலைப் புலி பயங்கரவாதிகளை அரசாங்கம் விடுவிக்கவுள்ளது. ஜனாதிபதியின் உறுதிமொழியை அடுத்து தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள்; நடத்திய உண்ணாவிரதம் கைவிடப்பட்டுள்ளது. நீதியமைச்சர், பல கைதிகளை விடுவிக்க கொள்கையளவில் சம்மதித்ததாகவும் அதற்கு ஜனாதிபதி உடன்பட்டுள்ளதாகவும் எதிர்க் கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் கூறியுள்ளார். எனவே, பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள பல தமிழ் இளைஞர்கள் விரைவில் விடப்படக்கூடும். அதே சமயம், கடுங்குற்றங்களில் தொடர்புடையோர் எனக் கருதப்படுபவர்கள் நீதிமன்றில் விசாரிக்கப்படுவர் என அவர் கூறியுள்ளார்.



