சிரியா வீழ்ந்தால் ஐ.எஸ். விஸ்வரூபமெடுக்கும்... ஐரோப்பாவுக்கு பேராபத்து
சிரியா வீழ்ந்தால் ஐ.எஸ். விஸ்வரூபமெடுக்கும்... ஐரோப்பாவுக்கு பேராபத்து
சிரியாவில் அதிபர் ஆசாத்தின் ஆட்சி கவிழ்க்கப்பட்டால் ஐ.எஸ். தீவிரவாதிகள் விஸ்வரூபமெடுப்பர்; அது ஐரோப்பியாவில் அரபு வசந்தம் உருவாக... ஐ.எஸ். தீவிரவாதிகள் நாசகார தாக்குதல்களை நடத்த வழிவகுத்து விடும் என்று லிபியாவின் சர்வாதிகாரியாக இருந்து கொல்லப்பட்ட கடாபியின் உறவினரும் தம்மை கடாபி வாரிசாக கூறிக் கொள்பவருமான அகமது கடாபி அல் தாம் எச்சரிக்கை விடுத்துள்ளார். லிபியாவுக்கான முன்னாள் உளவுத்துறை அதிகாரியாகவும் பணியாற்றிய அகமது கடாபி அல் தாம், ரஷ்யா ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறப்பட்டுள்ள முக்கிய தகவல்கள்
அவரது பேட்டியின் முக்கிய அம்சங்கள்: சிரியாவில் அதிபர் ஆசாத் அரசு நிலைத்திருக்க வேண்டும் என்று ரஷ்யா கருதுகிறது. ரஷ்யாவின் இந்த நிலையை அமெரிக்கா உள்ளிட்ட மேற்குல நாடுகள் பின்பற்ற வேண்டும். ரஷ்யாவின் நிலையை பின்பற்றாமல் போனால் அடுத்த 5 ஆண்டுகளில் உள்நாட்டுப் போரால் சிரியா நாசமாகிவிடும். சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் கை ஓங்கிவிட்டால் அவர்களது அடுத்த இலக்கு எண்ணெய் வளம் மிகுத அரேபிய வளைகுடாவாகத்தான் இருக்கும். சூயஸ் கால்வாயில் எண்ணெய் போக்குவரத்து தடுக்கப்பட்டால் ஒரு பேரல் விலை 200 டாலராக உயரும். இது மத்திய தரைக்கடல் நாடுகளில் பொருளாதார வீழ்ச்சியை ஏற்படுத்தும். ஐரோப்பிய நாடுகளிலும் 'அரபு வசந்தம்' எதிரொலிக்கும் நிலைமை உருவாகும். செளதியின் புனித தலமான மெக்காவை ஐ.எஸ். தீவிரவாதிகள் கைப்பற்றினால் பிலிப்பைன்ஸில் இருந்து மொராக்கோ வரையில் முஸ்லிம்கள் மனங்களில் கடும் தாக்கம் உருவாகும். ஐரோப்பியாவுக்குள் அகதிகளாக தற்கொலைப்படை தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளனர். ஐரோப்பாவில் நாசகார விஷவாயுக்களையும் ஐ.எஸ். தீவிரவாதிகள் கடத்திச் சென்றிருக்கக் கூடும். லிபியாவிலும் ஈராக்கிலும் முந்தைய அரசுகள் நீடித்திருந்தால் ஐ.எஸ். தீவிரவாதிகள் விஸ்வரூபமெடுக்க வாய்ப்பு இல்லாமல் போயிருக்கும்.