செவ்வாய் கிரகத்தில் மணல் குன்றுகள் - புகைப்படம் வெளியிட்டுள்ளது நாசா!
செவ்வாய் கிரகத்தில் மணல் குன்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் இதுகுறித்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. அமெரிக்க விண்வெளி அமைப்பான "நாசா" செவ்வாய் கிரகம் குறித்து தொடர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது. கடந்த 2006 இல் "மார்ஸ் ரெகோனாய்சன்ஸ் ஆர்பிட்டர்"(எம்.ஆர்.ஓ) என்ற விண்கலம் ஏவப்பட்டது.
இதில் பொருத்தப்பட்ட "இமேஜிங் ஸ்பெக்டோ மீட்டர்" மற்றும் அதில் பொருத்தப்பட்டுள்ள அதிக சக்திவாய்ந்த கேமரா செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பை துல்லியமாக போட்டோ எடுத்து அனுப்பி வருகிறது. சமீபத்தில் எடுத்து அனுப்பப்பட்ட போட்டோக்கள் ஆய்வு செய்யப்பட்டன. அதில் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் நொறுங்கிய நிலையில் மணல் குன்றுகளுடன் காணப்படுகிறது. உடைந்த படிவங்கள் காற்றில் பறந்து மணல் குன்றுகளாக மாறி இருப்பதாக விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர். ஏற்கனவே செவ்வாய் கிரகத்தில் திரவ வடிவில் நீர் இருப்பதானது, அந்த கிரகம் இன்னமும் புவியியல் ரீதியில் உயிர்ப்போடு இருப்பதை உறுதி செய்தது. இந்நிலையில் மணல் குன்றுகளும் கண்டறியப்பட்டுள்ளதால் அங்கு எளிமையான உயிரிகள் இருக்கலாம் என்பதற்கான சாத்தியப்பாட்டையும் சிறிதளவுக்கு இது அதிகப்படுத்தியிருக்கிறது.



