திருப்பெருந்துறையில் உள்ள பாழடைந்த கிணறு ஒன்றில் இருந்து சிறுவன் ஒருவனின் சடலம் மீட்பு.
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருப்பெருந்துறையில் உள்ள பாழடைந்த கிணறு ஒன்றில் இருந்து சிறுவன் ஒருவனின் சடலம் இன்று சனிக்கிழமை காலை 09.30 மணியளவில் மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர். சடலமாக மீட்கப்பட்டவர் திருப்பெருந்துறையை சேர்ந்த தினேஸ்குமார் வினோதன் என்னும் 16 வயது சிறுவன் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவர் மூன்று தினக்களுக்கு முன்னர் வீட்டில் இருந்து காணாமல் போனதாகவும் இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று காலை குறித்த பாழடைந்த கிணறில் இருந்து துர்நாற்றம் வருவதை அவதானித்த பிரதேச மக்கள் இது தொடர்பில் 119 அவசர தொலை பேசி இலக்கத்திற்கு பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட சடலம் மட்டக்களப்பு பிரதான நீதிமன்ற நீதவானின் மரண விசாரணையின் பின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியாசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.
குறித்த சிறுவன் உயிரிழந்தமை தொடர்பில் பல்வேறு கோணங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.


