மட்டக்களப்பு மாவட்ட தொழில் மத்திய நிலையம் மட்டக்களப்பு அரசடி பொது நூலகக் கட்டடத்தில் திறந்துவைப்பு.
ஐரோப்பிய ஒன்றியத்தின் மாவட்ட அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்துக்கான நிதி உதவியின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட தொழில் மத்திய நிலையத்தை, அரசடி நூலகக் கட்டடத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான தூதுவர் டேவிட் டலி திறந்து வைத்தார்.
வேலையற்ற இளைஞர், யுவதிகளுக்கும் தொழில் அதிபர்களுக்கும் மாவட்ட செயலகத்துக்கும் வேலை வாய்ப்புகள் தொடர்பான சேவைகளைப் பெற்றுக்கொள்ளும் நோக்கோடு இந்நிலையம் திறக்கப்பட்டுள்ளது.
இந்நிலையத்தில் தொழில் இணைப்பு பரிமாற்றங்கள், தொழில் சந்தையின் தகவல் வழங்குதல், தொழில் சந்தைக்கு தொழில் முயற்சியாளர்களை தயார் செய்தல், தொழில் பயிற்சிக்கு இளைஞர்களை சிபாரிசு செய்தல் மற்றும் தனியார் துறை தொழில் வாய்ப்புக்களுக்கு வழிகாட்டுதல் போன்ற சேவைகள் வழங்கப்படும்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி உதவியுடன் வவுனியா மற்றும் மன்னார் மாவட்டத்தில் இந்நிலையங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் அடுத்த கட்டமாக அம்பாறை மாவட்டத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், தொழில் மற்றும் தொழில் சங்க உறவுகளுக்கான அமைச்சின் செயலாளர் கோட்டாபய ஜயரத்ன, சர்வதேச தொழில் நிறுவனத்தின் இலங்கை மற்றும் மாலை தீவுக்கான பணிப்பாளர் டொங்லின் லீ, மனிதவலு வேலைவாய்ப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எச்.ஜி.ஜே.தர்மசேன ஆகியோர் கலந்து கொண்டனர்.



