ஜப்பானில் தவறுதலாக பெண்ணின் மார்பகத்தை அகற்றிய புற்றுநோய் மையம்
ஜப்பானில் உள்ள புற்றுநோய் மையத்தில் ஏற்பட்ட குளறுபடியால் தவறுதலாக வேறு ஒரு பெண்ணின் மார்பகம் அகற்றப்பட்டுள்ளது.
ஜப்பானின் சிபாவின் சுவோ வார்டில் இருக்கும் புற்றுநோய் மையம் ஒன்றில் கடந்த அக்டோபர் மாதம் ஒரே நாளில் இரண்டு பெண் நோயாளிகளிடம் இருந்து மாதிரிகள் பெறப்பட்டுள்ளது. அதில் ஒருவர் 30வயதுடையவர், மற்றொருவர் 50 வயதுடையவர். இருவருக்கும் மார்பகத்தில் ஊசி குத்தி அதன் மூலம் திசுக்கள் பெறப்பட்டுள்ளது.
இதில் 30களில் இருக்கும் பெண்ணுக்கு புற்றுநோய் ஆரம்பக்கட்டத்தில் இருந்துள்ளது. அதற்கு மார்பகத்தை அகற்ற வேண்டியது இல்லை. ஆனால் மருத்துவமனையில் நடந்த குளறுபடியால் 30களில் இருக்கும் பெண்ணுக்கு புற்றுநோய் முற்றிவிட்டதாக தெரிவித்த மருத்துவர்கள் வலது மார்பகத்தை உடனடியாக அகற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பெண்ணின் வலது மார்பகம் அகற்றப்பட்டது. கடந்த 15ம் தேதி அகற்றப்பட்ட மார்பகத்தை சோதனை செய்தபோது தான் அவருக்கு புற்றுநோய் ஆரம்பக்கட்டத்தில் இருந்தது தெரிய வந்தது.
இந்த குளறுபடி தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. முன்னதாக இதே மருத்துவமனையில் கடந்த 2008ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் லேப்ரோஸ்கோபிக் சிகிச்சை பெற்ற 11 நோயாளிகள் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.



