கறவைப்பசுவாக தன்னை நினைக்கும் பிள்ளைகளிடம் இருந்து தப்பிக்க மணமகள் தேடும் 90 வயது முதியவர்
குஜராத் மாநிலத்தில் பெற்ற பிள்ளைகள் தன்னிடமிருந்து பணம் கறப்பதே குறியாக இருப்பதால் ஓய்வுபெற்ற வங்கி மேனேஜரான 90 வயது முதியவர் தற்போது தனது மனைவியாக தகுதிபடைத்த மணமகளை தேடி அலைந்து கொண்டிருக்கிறார்.
இங்குள்ள பிரபல வங்கியில் மூத்த மேனேஜராக பணியாற்றிய மன்ஷுக்லால்(90) முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் பணிஓய்வு பெற்றார். அப்போது அவருக்கு அளிக்கப்பட்ட பணப்பலன்களில் இருந்து 50 லட்சம் ரூபாயை நிரந்தர வைப்பு நிதியாக போட்டுவைத்து, தனது இரு மகன்கள் மற்றும் இரு மகள்களை அந்த தொகைக்கான வாரிசுகளாக நியமித்திருந்தார்.
கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன்னர் மன்ஷுக்லாலின் மனைவி இறந்தார். அன்றிலிருந்து பட்டமரமாக தனிமையில் வாடிவரும் அவரை சமீபகாலமாக மகன்களும், மகள்களும் இம்சிக்க தொடங்கியுள்ளனர். மகளுக்கு சொந்தமான ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்துவரும் அவரிடம் இருந்து அந்த வீட்டுக்கு வாடகையாக மாதந்தோறும் 17 ஆயிரம் ரூபாயை அந்த மகள் வாங்கி விடுகிறார்.
அவருக்கு சாப்பாடு போடும் செலவுக்கு என்று ஆறாயிரம் ரூபாயை ஒரு மகன் கறந்து விடுகிறார். இப்படி, கறவை மாடாக மட்டும் தன்னை பயன்படுத்திக்கொள்ளும் மகள்கள் மற்றும் மகன்களின் போக்கை கண்டு கொதித்துப்போன மன்ஷுக்லால், தன்னை கவனித்துக் கொள்ள யாருமே இல்லையே..? என்ற தனிமை ஏக்கத்தில் துவண்டுப்போய் உள்ளார்.
மாதாமாதம் என்னிடம் பணம் வாங்க மட்டும் வந்துப்போகும் பிள்ளைகள், நான் எப்போது சாவேன்? எனது நிரந்தர வைப்பு நிதியான 50 லட்சம் ரூபாயை பங்குப்போட்டுக் கொள்ளலாம் என காத்திருக்கின்றனர் என இவர் வேதனையோடு கூறுகிறார்.
தன்னைப்பற்றி கவலைப்படாத பிள்ளைகளுக்கு தனது வாழ்நாள் சேமிப்பான அந்ததொகை போய் சேர்ந்து விடக்கூடாது என்று முடிவெடுத்த அவர், தற்போது தன்மீது அன்பும், பாசமும் செலுத்தி, தன்னை அக்கறையுடன் கவனித்துக்கொள்ளக்கூடிய தகுந்த வாழ்க்கைத் துணையை தேடி வருகிறார்.
இதற்காக, முதியோர்களுக்கு திருமணப்பொருத்தம் ஏற்படுத்தித்தரும் ஒரு நிறுவனத்தை அணுகியுள்ள மன்ஷுக்லால், தனது மனசுக்கேற்ற மகராசியின் வருகைக்காக வழிமீது விழிவைத்து காத்திருக்கிறார்.



