பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த 9 வீரர்களின் உடல்கள்....
சியாச்சின் சிகரத்தில் கடந்த 3-ம் தேதி ஏற்பட்ட கடும் பனிச்சரிவில் மெட்ராஸ் ரெஜிமென்ட் படை வீரர்களின் ராணுவ முகாம் பனியில் புதைந்தது. இதில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஹனுமந்தப்பா என்ற வீரர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டார். மற்ற 9 வீரர்களும் பலியாகினர். அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. டெல்லி ராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஹனுமந்தப்பாவும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு பின்னர் அடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில், மற்ற 9 வீரர்களின் உடல்களையும் சியாச்சின் உச்சியில் இருந்து அடிவாரத்திற்கு கொண்டு வர முடியாத அளவிற்கு கடும் பனிப்பொழிவு ஏற்பட்டது. ஹெலிகாப்டர்கள் செல்ல முடியாததால் அவர்கள் உடல்களை உறவினர்களிடம் ஒப்படைப்பதில் தாமதம் ஏற்பட்டது.
இந்நிலையில், சம்பவம் நடந்து 10 நாட்களுக்குப் பிறகு இன்று பனிப்பொழிவு குறைந்து வானிலை ஓரளவு சீரானது. இதனால், ஹெலிகாப்டர்களை அனுப்பி 9 வீரர்களின் உடல்களும் அடிவாரத்திற்கு கொண்டு வரப்பட்டன. அங்கிருந்து லெஹ் கொண்டு வர திட்டமிடப்பட்டது. ஆனால், சியாச்சின் அடிவார முகாமிற்கும் லெஹ் பகுதிக்கும் இடையே ஹெலிகாப்டரை இயக்கும் அளவுக்கு வானிலை சீரடையவில்லை. எனவே, உடல்கள் அனைத்தும் அருகில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
நாளை வானிலை சீரடையும் என்று வானிலை மையம் கூறியிருப்பதால், 9 வீரர்களின் உடல்களும் நாளை லெஹ் பகுதிக்கு கொண்டு வரப்பட்டு அங்கிருந்து டெல்லிக்கு அனுப்பி வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.



