காத்தான்குடி இஸ்லாமிய கலை கலாசார பண்பாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் -புதிய அரசியல்யாப்பு தொடர்பான விரிவுரை-படங்கள்
இலங்கையில் தற்போது பேசு பொருளாகியுள்ள புதிய அரசியல்யாப்பு மாற்றம் தொடர்பான விஷேட விரிவுரை ஒன்று காத்தான்குடி இஸ்லாமிய கலை கலாசார பண்பாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் பிஸ்மி தலைமைக் காரியாலய கேட்போர் கூடத்தில் கடந்த 13 சனிக்கிழமை மாலை இடம்பெற்றது.
இஸ்லாமிய கலை கலாசார பண்பாட்டு கழகத்தின் ஆலோசகர் அஷ்ஷெய்க் எம்.பி.எம் பிர்தௌஸ் (நளீமி) தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் அரசியலமைப்பு மாற்றத்திற்கான பிரஜைகள் முன்னணியின் உறுப்பினரும், களணி பல்கலைக்கழகத்தின் முன்னாள் சிரேஷ்ட விரிவுரையாளருமான பேராசிரியர் ஜயந்த செனவிரட்ன அரசியல யாப்பு மாற்றம் தொடர்பாக விஷேட விரிவுரை சிங்கள மொழியில் இடம்பெற்றது.
அதற்கான தமிழ் மொழிபெயர்ப்பினை சகோதரர் நசீர் வழங்கினார்.
குறித்த விரிவுரையில் அரசியல் யாப்பு மாற்றம் தொடர்பாகவும் சிறுபான்மையினரை பாதிக்காதவகையில் இந்த யாப்பு எவ்வாறு இடம்பெறவேண்டும் என்பது பற்றியும் 1972ம் ஆண்டு பிரதமராகவிருந்த சிரிமாவோ பண்டாரநாயக்க மற்றும் 1978 ம் ஆண்டு ஜனாதிபதி ஜே ஆர் ஜயவர்த்தன ஆகியோரால் கொண்டுவரப்பட்ட யாப்புகளில் உள்ள குறைபாடுகள் பற்றியும் தற்போது அரசியல் அமைப்பில் மேற்கொள்ள வேண்டிய பாரிய திருத்தங்கள் பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார்.
அத்துடன் இந்தியா ஜேர்மனி தென் ஆபிரிக்கா போன்ற நாடுகளின் அரசியலமைப்பில் உள்ள சிறப்பம்சங்கள் பற்றியும் தெளிவுபடுத்தினார்.
இந் நிகழ்வின் விஷேட அம்சமாக கேள்வி பதில் நிகழ்வும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
அதில் புதிய அரசியல் அமைப்பு தொடர்பாக இருந்த சந்தேகங்கள் பல தெளிவுபடுத்தப்பட்டன.
அத்தோடு நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் அரசியல் அமைப்பு மாற்றம் தொடர்பான தமிழ் மொழியிலான நூல் ஒன்றும் இலவசமாக வழங்கி வைக்கப்பட்டது.







