Breaking News

அல்குர்ஆன் கல்வியைப் பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு-படங்கள்

-பழுலுல்லாஹ் பர்ஹான்-

மட்டக்களப்பு -காத்தான்குடி இஸ்லாமிக் சென்றரின் கீழ் இயங்கும் தாருத் தௌஹீத் இஸ்லாமிய முன்மாதிரி கலாபீடத்தில் அல்குர்ஆன் கல்வியைப் பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் மற்றும் பரிசில்கள் வழங்கும் நிகழ்வு அண்மையில் காத்தான்குடி ஜாமிஉத் தௌஹீத் பள்ளிவாயலில் இடம்பெற்றது.

தாருத் தௌஹீத் இஸ்லாமிய முன்மாதிரி கலாபீடத்தின் அதிபர் அஷ்ஷெய்க் எஸ்.எம்.பீ.எம்.அன்ஸார் (மதனி) தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில் பிரதம அதிதியாக காத்தான்குடி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யூ.எல்.நஸீர்தீன்; கலந்து கொண்டதோடு கௌரவ மற்றும் சிறப்பு அதிதிகளாக சமூக மறுமலர்ச்சி உளவளத்துணை சங்கத்தின் தலைவர் முகைதீன் சாலி ,டாக்டர் எம்.என்.எம். முஸ்தாக் ,டாக்டர்.ஜலால்தீன், பிரதேச கிராம உத்தியோகத்தர், ஊரின் முக்கிய பிரமுகர்கள், உலமாக்கள், இஸ்லாமிய கல்வி நிலையத்தின் நிருவாகிகள் ,மாணவர்களின் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது அதிதிகளினால் அல்குர்ஆன் கல்வியை பூர்த்தி செய்த 18 மாணவர்கள் சான்றிதழ்களும், பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இங்கு இஸ்லாமிய கல்வியின் முக்கியத்துவம் தொடர்பில்; சிறப்புரையை காத்தான்குடி மஃஹதுஸ் ஸுன்னா பெண்கள் அறபுக் கல்லூரியின் அதிபர் அஷ்ஷெய்க் எம்.ஏ.சீ.எம். செயினுலாப்தீன் (மதனி) உரை நிகழ்த்தினார்.

குறித்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட காத்தான்குடி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யூ.எல்.நஸீர்தீன்; தனது உரையில் மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கு அவர்களது உடல் ஆரோக்கியம் மிகவும் பிரதானமானது. எனவே குழந்தைகளுக்கு ஆரோக்கியமான போசாக்குள்ள உணவுகளை பெற்றோர் அவசியம் வழங்க வேண்டும் இதுவே அவர்களை சிறந்த ஆளுமை கொண்டவர்களாக உருவாக்கும் என குறிப்பிட்டார்.

அதனைத் தொடர்ந்து 2016ஆம் ஆண்டு அல்குர்ஆன் கல்வியைத் புதிதாகத் தொடர்வதற்காக 33 புதிய மாணவர்கள் இணைத்துக் கொள்ளும் நிகழ்வு இடம்பெற்றது. அதில் அவர்களுக்கான சீருடைகள், பேக், புத்தகங்கள் மற்றும் கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டது.

4 வருட கால பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடாத்தப்படும் இக் கல்வி நிலையத்தில் சுமார் 120 மாணவர்கள் தற்பொழுது கல்வி கற்று வருகின்றனர்.
அத்தோடு (ஹிஃப்ழ்) அல்குர்ஆன் மனனப் பிரிவில் சுமார் 40 மாணவர்களும் இணைந்து கற்கின்றனர்.

அரசாங்க பாடசாலையில் 3ம் ஆண்டு கல்வியை நிறைவு செய்கின்றபோது மாணவர்கள் தங்களது அல்குர்ஆன் கல்வியைப் முழுமையாகப் பூர்த்தி செய்து இக் கல்வி நிலையத்திலிருந்து வெளியேறும் வகையில் அவர்களுக்கான கற்பித்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அல்குர்ஆன் கல்வியைப் பூர்த்தி செய்கின்ற அதே வேளையில் தஜ்வீத், இஸ்லாமிய அகீதா, அன்றாட வாழ்வுக்கு தேவையான ஹதீஸ்கள் மற்றும் துஆக்களும் கற்பிக்கப்படுகின்றன.

இஸ்லாமிக் சென்றர் கல்விப் பிரிவினால் மிகவும் இலகு படுத்தப்பட்டு தயாரிக்கப்பட்ட பாடத்திட்டம் இம் மாணவர்களுக்கு நூற்களாக வழங்கப்பட்டு அவர்களுக்கு அறபு மொழி எழுத்துக்கள் புரிந்து கொள்வதற்கு இலகுபடுத்தப்பட்டுள்ளன. மேலும் ஹிஃப்ழ் அல்குர்ஆன் மனனப் பிரிவு ஆரம்பிக்கப்பட்டு ஒரு வருடத்தை கடந்துள்ள நிலையில் அதிகமான பெண் மாணவிகள் மிக அதிகமான சூராக்களை மனனமிட்டு முன்னணியில் நிற்கின்றனர். ஹிஃப்ழ் அல்குர்ஆன் மனனப் பிரிவுக்கான பொறுப்பாளராக மௌலவி கே.எம்.எம்.அஜ்மீர் (பலாஹி) நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.