Breaking News

உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி உளவு செயற்கை கோளை விண்ணில் செலுத்தியது வடகொரியா : அமெரிக்கா கண்டனம்

உலக நாடுகளின் பலத்த எதிர்ப்புக்கு  மத்தியிலும் உளவு ராக்கெட்டை வடகொரியா விண்ணில் செலுத்தியது.

கடந்த மாதம் (ஜனவரி) 6–ந்தேதி வடகொரியா நைட்ரஜன் குண்டு வெடித்து சோதனை நடத்தியது. இதற்கு அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான், உள்ளிட்ட உலக நாடுகள் மற்றும் ஐ.நா. சபை கண்டனம் தெரிவித்தது.

அதை கண்டு கொள்ளாத வடகொரியா சமீபத்தில் நீண்ட தூரம் சென்று தாக்க கூடிய ஏவுகணையை செலுத்தி சமீபத்தில் சோதனை நடத்தியது. அதற்கும் அமெரிக்கா மற்றும் ஐ.நா. சபை எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பொருளாதார தடை விதிக்கப்போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும், பூமியை உளவு பார்க்கும் செயற்கை கோளை விண்ணில் செலுத்த திட்டமிட்டிருப்பதாகவும் எச்சரித்தன. அதற்கு எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டது. அவை எதையும் காதில் வாங்கி கொள்ளாத வடகொரியா இன்று உளவு செயற்கை கோளை விண்ணில் செலுத்தியது.

வடகொரியா நேரப்படி இன்று காலை 9 மணிக்கு ராக்கெட் மூலம் அந்த செயற்கை கோள் ஏவப்பட்டது. ஐப்பானின் தெற்கு ஒகினாவா தீவுகளை கடந்து ராக்கெட் பறந்ததாக தகவல்கள் தெரிவித்தன.

இதற்கிடையே உளவு செயற்கை கோளை ராக்கெட் மூலம் ஏவியதை வடகொரியாவே அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது. அரசு டி.வி.யில் அதன் பெண் செய்தி அறிவிப்பாளர் பாரம்பரிய உடையில் தோன்றி அதிபர் கிம் ஜாங் யங் உத்தரவுப்படி பூமியை உளவு பார்க்கும் க்வாங்மியாங் 4 என்ற செயற்கை கோள் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது என்றார்

வட கொரியாவின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா, ஜப்பான், மற்றும் தென் கொரியா நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இது கோபம் ஏற்படுத்துகிற செயல் என தெரிவித்துள்ளன.

மேலும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் அவசர கூட்டம் நடைபெற உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.